இலங்கை முன்னாள் அமைச்சர் வீட்டில் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் உடல்

இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஜூலை 30ம் தேதி மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 26ம் தேதி வழங்கப்பட்ட உத்தரவிற்கு இணங்க இந்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 வயதான சிறுமி வேலை செய்து வந்த நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த சிறுமி கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடலில் சுமார் 72 சதவிகித பகுதிகளில் தீ காயங்கள் ஏற்பட்டமையினால் இந்த மரணம் நேர்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த சிறுமி தொடர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொழும்பு தெற்கு ஸ்பெஷல் போலீஸ் பிரிவு, பொரள்ளை போலீஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 26ம் தேதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 9ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகளவில் வாழும் மலையகத்தின் டயகம பகுதியிலிருந்தே இந்த சிறுமி வேளைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணியாற்றிய 10 இளம்பெண்களும் அதே பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமிகளில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியதாக கூறப்படும் ஐந்து இளம்பெண்கள் உள்ளிட்ட 9 பேரிடம் போலீஸார் இதுவரை விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் உயிரிப்புக்கு நீதிக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *