இந்தியாவிற்கு அடுத்த பதக்கத்தை உறுதி செய்த இந்த லவ்லினா யார்?

இந்தியாவின் 130 கோடி கண்களும் மேரி கோமை மட்டுமே உற்றுநோக்கிக் கொண்டிருக்க, அத்தனை மனங்களும் அவர் பதக்கம் வெல்ல வேண்டும் என்றே வேண்டிக் கொண்டிருக்க, அதே டோக்கியோ ஒலிம்பிக்கில் அதே குத்துச்சண்டையில் சத்தமே இல்லாமல் சரித்திரம் படைத்துள்ளார் லவ்லினா போர்கோஹெய்ன். இந்தியா சார்பில் வால்டர் வெயிட் பிரிவில் களமிறங்கிய 23 வயது இளம் வீராங்கனையான இவர் காலிறுதிப் போட்டியை வென்று இந்தியாவிற்கான இந்த ஒலிம்பிக்கின் இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலி பற்றிய கதைகளை கேட்டும், அவரை பற்றிய செய்திகளை படித்துமே வளர்ந்திருக்கிறார் லவ்லினா.

பின்தங்கிய அசாம் மாநிலத்தில் இன்னமும் பின்தங்கி போயிருக்கும் ஒரு குக்கிராமமான கோலகட்டில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் லவ்லினா. அப்பா ஒரு சிறுகுறு தொழில் நடத்துபவர். பள்ளியில் படிக்கும்போதே பல விளையாட்டுகளிலும் ஆர்வமுடையவராக இருந்திருக்கிறார். மேலும், இவரின் மூத்த சகோதரிகள் தற்காப்பு கலை பயின்றிருக்கின்றனர். சகோதரிகளைப் போலவே சிறுவயதில் தற்காப்பு கலை பயின்ற லவ்லினா, ஒருநாள் செய்தித்தாளில் முகமது அலி பற்றிய ஒரு செய்தியை படித்துவிட்டு தனது அம்மாவிடம் அவரை பற்றி கேட்டிருக்கிறார். மைக் டைசனின் மாபெரும் ரசிகையான அவரது அம்மா லவ்லினாவுக்கு முகமது அலியின் கதைகளை கூற ஆரம்பித்திருக்கிறார். எல்லாமே அங்கிருந்துதான் தொடங்கியிருக்கிறது.

தொடக்கத்தில் தனது கிராமத்திலிருந்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தியே ஆரம்பக்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதிலேயே மிக நேர்த்தியாக குத்துகளை விட பயின்றிருக்கிறார். 2012 ஒலிம்பிக்கில் மேரி கோம் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவின் புகழை உயர்த்தியிருந்தார். இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிற்கு சென்ற ஒரே வீராங்கனை பதக்கத்தோடு திரும்பியதால் பலருடைய கவனமும் குத்துச்சண்டை பக்கம் திரும்பியது.

அரசும் குத்துச்சண்டை மீது கூடுதல் கவனம் செலுத்தியது. 2012-ம் ஆண்டு இளம் பாக்ஸர்களை தேர்வு செய்து பயிற்சியளிப்பதற்காக இந்திய விளையாட்டு ஆணையம் தேட ஆரம்பித்தது. இதில் பாக்ஸிங் பயிற்சியாளரான படும் போரா-வின் கண்களில் லவ்லினா தென்பட்டார். லவ்லினாவின் குடும்பத்திடம் பேசினார் போரா. தனது குடும்பத்தினருடைய ஆதரவோடு இந்திய விளையாட்டு ஆணையத்தில் தங்கியிருந்தே பயிற்சிகளை மேற்கொண்டார் லவ்லினா.

அசாமிலிருந்து ஹீமாதாஸ் ஒலிம்பிக்கிற்கு செல்வார் என எதிர்பார்த்திருக்கையில் காயம் காரணமாக அவர் ஒலிம்பிக்கிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அசாம் சார்பில் ஒலிம்பிக்கிற்கு செல்லும் முதல் பெண் என்கிற பெருமையை பெற்றார் லவ்லினா.

கிரிக்கெட்டை தாண்டி கேரளாவில் எப்படி கால்பந்து ரசிக்கப்படுகிறதோ அப்படியே வடகிழக்கு மாநில மக்களும்  கிரிக்கெட்டை விட பல விளையாட்டுகளுக்கும் பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இப்போது ஒட்டுமொத்த அசாமுமே சேர்ந்து லவ்லினாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. வீதியெங்கும் லவ்லினாவின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அரசியலர்களும் லவ்லினாவுக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை இந்தியா சார்பில் அசாமை சேர்ந்தவர்கள் யாருமே பதக்கம் வென்று கொடுத்ததே இல்லை என்ற நிலையை உடைத்திருக்கிறார் லவ்லினா. அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதன் மூலமாக இந்தியாவின் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *