ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா, கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா என்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் கூறியிருந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்று ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் திரையரங்குகள், மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர், அதிகாரிகளிடம் கருத்து கேட்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கோவில் விழாக்கள், அரசியல் நிகழ்வுகள், கூட்டங்களுக்கு தளர்வுகள் அளிப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கொரோனா அச்சம் விலகாத நிலையில் வழங்கப்படும் சில தளர்வுகளால் மக்கள் உடனடியாக கூட்டமாக சேர்ந்து விடுவதாக சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *