மேகதாது அணை : பாஜக அரசை எதிர்த்து பாஜக போராட்டம்!

கர்நாடக அரசு மேகதாது அணையில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என்று கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா என இருமாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசும், கட்ட விட மாட்டோம் என்று தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், புதிதாகப் பதவியேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பதவியேற்ற பின்பு செய்தியாளர்களுக்குக் கொடுத்த முதல் பேட்டியிலேயே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம். அது எங்களது உரிமை என்று பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் மேகதாது அணை கட்ட போவதாக, கர்நாடகா மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் தெரிவித்திருக்கிறார். இது வேதனைக்குரியது; கண்டிக்கத்தக்கது. ஒன்றிய நீர் வளத்துறை அமைச்சர் அணை கட்ட அனுமதி தரக் கூடாது. ஒரே கட்சியாக இருந்தாலும், கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி, தஞ்சாவூரில் தமிழக பாஜகவின் விவசாய அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். எனது தலைமையில் தஞ்சை பனகல் பில்டிங் அருகில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. மேகதாது அணையை கட்டவிடமாட்டோம். இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், மீனவர்களுக்கான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மீன்வளக் கொள்கை குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் இன்று (ஜூலை 30) பிற்பகல் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழ்நாடு பாஜக மீனவர் அணியின் சார்பில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *