மாணவர்கள் தற்கொலைக்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல; அண்ணா பல்கலை விளக்கம்..!

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட இன்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு முடிவுகள் சில மாணவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து அரசு அதற்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டு, அந்த தேர்வும் ஆன்லைனில் வாயிலாகவே நடத்தப்பட்டது.

இதற்கிடையில், அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஊழியர் சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி உயர்கல்வித் துறைக்கு இது தொடர்பாக மின்னஞ்சலில் புகார் அனுப்பியது. அதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில், “கடுமையான நோய்த் தொற்று சூழல் நிலவும் இந்த நேரத்தில், ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆன்லைன் தேர்வு நடைமுறை இந்தத் துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகுதான் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, இந்த வகையான தேர்வு முறையில் குறைபாடுகள் இருப்பதாக கூறுவது தவறு.

எந்தச் சூழ்நிலையிலும் தேர்வை எதிர்கொள்வது மாணவர்களுடைய பொறுப்பு ஆகும். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பல்கலைக்கழகம் எந்த வகையிலும் பொறுப்பல்ல எனத் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு, மறுதேர்வு நடத்த பல்கலைக்கழகத்திற்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, தேர்வு முடிவு, மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பியவர்களுக்கு மறுதேர்வும் நடத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *