இளையராஜா குறித்து இழிவான பேச்சு – சித்ரா லட்சுமணன், இயக்குநர் ரத்னகுமாருக்கு நெருக்கடி!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக, திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மீண்டும் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யூ-ட்யூபில் ஒளிபரப்பான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு இழிவுப்படுத்தியதாக, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து என்பவர் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “கடந்த பிப்ரவரி மாதம், நடிகர் சித்ரா லட்சுமணன் தான் நடத்தும் “Chai with chithra” என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் திரைப்பட கதாசிரியரும் இயக்குநருமான ரத்னகுமார் கலந்துக் கொண்டார். அதில் இசைஞானி இளையராஜாவை அவரது ஜாதியை குறிப்பிட்டு வைத்து இழிவாக பேசினார் இயக்குனர் ரத்னகுமார். அதற்கு சித்ரா லட்சுமணனும் அனுமதித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதமே புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதனால் மீண்டும் புகார் அளித்துள்ளோம். புதிய டிஜிபி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இளமுருகு முத்து, “ரத்ன குமார் மற்றும் சித்ரா லட்சுமணன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதனால் மீண்டும் புகார் அளித்துள்ளோம். இழிவாக பேசிய வீடியோவை அவர்களே யூடியூப்பில் இருந்து நீக்கிவிட்டனர். ஆதாரங்களை மறைத்தாலும் குற்றம் குற்றம் தான். ஆகையால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உறுதியாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *