ஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்டது ஏன்?

1984ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்த ஒரு பெண்மணிக்கு , கம்பீரமான ராஜ மரியாதை கொடுக்கப்பட்டதைக் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

அவரது பெயர் கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ் (Gabriela Andersen Schiess). சுவிட்சர்லந்து நாட்டைச் சேர்ந்தவர்.

பொதுவாக ஒலிம்பிக் மாரத்தானில் பெரும்பாலான தூரத்தை சாலைகளில் கடந்தாலும், கடைசி 400 மீட்டர் தூரத்தை, ஒலிம்பிக்கின் மற்ற தடகள போட்டிகள் நடக்கும் தடகள ஓடுதளத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் தான் ஓடி எல்லைக் கோட்டைத் தொடும் படி அமைக்கப்பட்டிருக்கும்.

தடகள அரங்கில் நுழையும் வீரர்களை, பார்வையாளர்கள் ஆரவாரத்தோடு வரவேற்பர். மற்றவர்களோடு போட்டியிட்டு மாரத்தான் எல்லைக் கோட்டைக் கடந்து பதக்கம் வெல்லும் வீரர்கள் சிறப்பாக கெளரவிக்கப்படுவார்கள்.

இப்படி மாரத்தானில் பதக்கத்துக்காகவோ அல்லது தன்னை நிரூபித்துக் கொள்வதற்கோ பெண்களுக்கு 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் தான் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

அதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகள் வரை “பெண்களால் அவ்வளவு தூரத்தை எல்லாம் ஓடிக் கடக்க முடியுமா என்ன?” “மாரத்தான் ஓடும் அளவுக்கு பெண்களுக்கு உடல் வலிமையோ, மனவலிமையோ போதாது” என பலரும் பேசி வந்தனர்.
வாய்ப்புக்காக காத்திருந்த பெண்களுக்கு 1984 ஒலிம்பிக்ஸ் ஓர் அற்புத தொடக்கமாக அமைந்தது.

தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் ஜோன் பெனாய்ட் ஒலிம்பிக் பெண்கள் மாரத்தானில் 2 மணி 24 நிமிடம் 52 நொடிகளில் முதலிடத்தைப் பிடித்துவிட்டார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக எல்லைக் கோட்டைக் கடந்தனர்.

கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ் (Gabriela Andersen Schiess) ஒலிம்பிக் தடகள மைதானத்தில் நுழைந்தார். ஆனால் அவர் ஓடிவருவதைப் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.

நிலை குலைந்து விழுவது போல் தள்ளாடிக் கொண்டு வந்தார். ஓட்டம் நடையாக மாறியது. பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு என்ன நடக்கிறது என சில நொடிகளில் உணர்ந்து கொண்டனர்.

அவரைத் தாங்கிப் பிடிக்க ஒரு ஒலிம்பிக் அதிகாரி ஓடி வருகிறார், அவர் தன்னைத் தொடாத படிக்கு அவரிடம் இருந்து விலகுகிறார் கேப்ரியலா.

ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் ஒரு போட்டியாளர் யாருடைய துணையுமின்றி பந்தய தூரத்தைக் கடந்தால் தான், அவருடைய நேரம் கணக்கில் வரும், இல்லை எனில், அவர் போட்டியை நிறைவு செய்யவில்லை என குறிப்பிடப்படுவார்.

கேப்ரியலா அதற்கு எல்லாம் இடம் கொடுக்கவில்லை. கால்கள் பின்னிக் கொள்கின்றன. அவரது உடல் இடது புறமாக சாய்கிறது, ஓடுதளம் வளைந்து இருக்கும் இடத்தில் கூட அவரால் சரியாக வளைந்து நடக்க முடியாமல், நேராக நடக்கிறார்.

அவரது விடாமுயற்சியைக் கண்டு பார்வையாளர்களும், அதிகாரிகளும், உதவியாளர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஊக்கப்படுத்தத் தொடங்கினர்.

எல்லைக் கோட்டை நெருங்க நெருங்க கேப்ரியலாவின் வேகம் குறைந்து கொண்டே வந்தது. எல்லைக் கோட்டை கடந்த உடனேயே அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தனர். சுமார் 5.44 நிமிட போராட்ட நடைக்கு பிறகு, எல்லைக் கோட்டை தன்னிசையாக நிறைவு செய்தார் கேப்ரியலா. 2 மணி 48 நிமிடம் 44 நொடியில் தன் மொத்த பந்தய தூரத்தைக் கடந்தார் என குறிப்பு எழுதப்படுகிறது.

44 பேர் கலந்து கொண்ட போட்டியில் அவருக்கு 37ஆவது இடம் தான் கிடைத்தது. ஆனால் மனித மனத்தின் வலிமைக்கான போட்டியிலும், மிளிரும் தன்னம்பிக்கைப் போட்டியிலும் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பெண்களால் 42.2 கிலோமீட்டர் எல்லாம் ஓட முடியுமா? அவர்களது உடல் ஒத்துழைக்குமா, அத்தனை மன வலிமை எல்லாம் உண்டா? என பெண்களின் திறன் மீது வைக்கப்பட்ட சந்தேகக் கேள்விகளுக்கு எல்லாம் அவரது 5.44 நிமிட நடை ஒற்றை பதிலாக உரக்க ஒலித்தது.

சரி, அவருக்கு ஏன் இப்படி ஆனது? மாரத்தான் போட்டிகளில், வீரர்கள் ஓடும் போதே நீர் குடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேப்ரியலாவோ அப்போட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடைசி நீர்பந்தலில் தண்ணீர் குடிக்கவில்லை. போட்டி நாள் வரை கேப்ரியலாவுக்கு அமெரிக்காவின் தட்ப வெப்ப நிலை முழுமையாக ஒத்துவரவில்லை. அது தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்.

போட்டியை நிறைவு செய்த கேப்ரியலாவை மருத்துவ வாகனத்தில் படுக்க வைத்து, உடல் முழுக்க தண்ணீர் ஊற்றிய படி, அவரை தடகள ஓடுதளத்திலிருந்து அழைத்துச் சென்ற போது மொத்த கூட்டமும், பதக்கம் வென்ற வீராங்கணைக்கு நிகராக ராஜ மரியாதை கொடுத்து, சகல கெளரவமாக வழியனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *