கட்சிக்கு எடியூரப்பா ஆற்றிய பணிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை: பிரதமர் மோடி

பாஜகவிற்கு எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு எடியூரப்பாவை போலவே லிங்காயத்து பிரிவைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் அவருக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், பாஜகவின் வெற்றிக்கும் எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல ஆண்டுகள் அவர் கடுமையாக உழைத்தவர்.

கர்நாடகாவின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து மக்களின் ஆதரவை பெற்றவர். சமூக நலத்திட்டங்கள் மீதான அவரது ஆர்வத்தால் மக்களால் எடியூரப்பா பெரிதும் ஈர்க்கப்பட்டார்’ என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், மற்றொரு ட்வீட்டில் ‘கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துகள். அவர் சட்டமன்ற மற்றும் நிர்வாக அனுபவம் அதிகம் கொண்டவர். மாநிலத்தில் அரசு செய்துள்ள பணிகளை அவர் தொடர்ந்து கட்டியெழுப்புவார் என்று நான் நம்புகிறேன்’ என பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *