‘வேலை தேடி வந்த இளைஞர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம்!’

புதுச்சேரிக்கு வேலை தேடி வந்த இளைஞரை பில்லி, சூனியம் வைக்க வந்தவர் என நினைத்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் ராஜமௌரியா. பா.ஜ.கவின் வணிகப் பிரிவு தலைவரான இவருக்கு மேட்டுப்பாளையத்தில் சொந்தமான பெட்ரோல் பங்க் இருக்கிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் பக்கம் நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த இரண்டு ஊழியர்கள் திருடன் என நினைத்து அந்த இளைஞரை அழைத்து கடுமையாக விசாரித்திருக்கின்றனர். அப்போது அந்த இளைஞர் தான் வேலை தேடி வந்ததாகவும், மழை பெய்வதால் ஒதுங்க இடம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அதனை நம்பாத ஊழியர்கள் பங்க் உரிமையாளரான ராஜ மௌரியாவுக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் தனது சகோதரர் ராஜவரதன் மற்றும் சில நண்பர்களுடன் அங்கு வந்த ராஜ மௌரியா அந்த இளைஞரை தாக்கி விசாரித்திருக்கிறார். அப்போதும் தான் திருட வரவில்லை என்றும் வேலை தேடி தான் புதுச்சேரிக்கு வந்தேன் என்று கூறிய அந்த இளைஞர், அறை எடுத்து தங்குவதற்கு பணமில்லாமல் சாலையில்தான் படுத்து தூங்குகிறேன். மழை பெய்ததால் ஓரமாகப் படுப்பதற்காகத்தான் இடம் தேடி வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அதனை நம்பாத ராஜ மௌரியாவும் அவரது நண்பர்களும் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் உண்மையை சொல்லவில்லை என்றால் உயிரோடு எரித்து விடுவதாக மிரட்டி அவர் மீது பெட்ரோலை ஊற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து தீக்குச்சியையும் உரசி மிரட்டியதால் அந்த இளைஞர் மீது அப்போதே தீப்பிடித்து எரிந்தது. உடனே அவர்களிடம் இருந்து தப்பித்து தீக்காயங்களுடன் நடந்தே கதிர்காமல் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மேட்டுப்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞரின் பெயர் சதீஷ்குமார் என்பதும் திருச்சி பிரட்டியூர் கீழத் தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில், வேலைதேடி புதுச்சேரிக்கு வந்த அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் இருக்கும் பல கம்பெனிகளுக்குச் சென்று வேலை கேட்டிருக்கிறார். வேலை எதுவும் கிடைக்காததால் பணம் இல்லாமல் சாலையோரத்தில் தங்கி வேலைக்கு முயற்சித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று நள்ளிரவு மழை பெய்து கொண்டிருந்ததால் பெட்ரோல் பங்க் ஓரமாகப் படுத்து தூங்க சென்ற போது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சுற்றி வளைத்திருக்கின்றனர். அவரை திருடன் என்றும் பில்லி சூனியம் வைக்க வந்தவர் என்றும் நினைத்து அவரை தாக்கியதுடன் பெட்ரோலையும் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது.

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சதீஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைப் பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெட்ரோல் பங்க உரிமையாளர் ராஜ மௌரியா, அவரது சகோதரர் ராஜவரதன், பங்க் ஊழியர்களான சிவசங்கரன் மற்றும் குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்பு கொண்ட தலைமறைவாக இருக்கும் மூன்றுபேரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *