1,500 ஸ்மார்ட் டாய்லெட்டுகள்: சென்னை மாநகராட்சி திட்டம்

‘நம்ம டாய்லெட்’ என்ற பெயரில் நவீன வசதிகள் கொண்ட ‘ஸ்மார்ட் டாய்லெட்’டுகளை உருவாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

திறந்தவெளி கழிப்பிடத்தை குறைத்து, மக்களை நோயில் இருந்து பாதுகாக்கவும், சுகாதாரத்தினை மேம்படுத்தவும் நகர் பகுதிகளில் ‘நம்ம டாய்லெட்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. சென்னையை பொறுத்தவரை, STUF என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை மாநகராட்சி அமல்படுத்த இருக்கிறது. முதல் கட்டமாக, ஈசிஆர், ஓஎம்ஆர் மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களை தேர்வு செய்து சோதனை முயற்சியாக ‘ஸ்மார்ட் டாய்லெட்’ அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

1000 முதல் 1500 ஸ்மார்ட் டாய்லெட்டுகளை பொது இடங்களில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே திருச்சி மாநகராட்சியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளதால் சென்னையில் அதற்கான பணிகளை தொடங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஸ்மார்ட் டாய்லெட்டுகள் அமைந்திருக்கும் இடங்களில் வாகனங்களை சார்ஜ் செய்வது போன்ற வசதிகளை கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் ஸ்மார்ட் டாய்லெட்டுகள் வடிவமைக்கப்பட உள்ளன. ஸ்மார்ட் டாய்லெட்டுகளில் கிருமிகளை அழிப்பதற்கு UV லைட் முறை பயன்படுத்தப்பட உள்ளன. டாய்லெட் வளாகங்களில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தினால் அதனை அறியும் வகையில் வசதிகள் கொண்டுவரப்பட உள்ளன. இதனைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுக்கழிப்பிடம் என்றாலே சுகாதாரமற்ற முறையில் இருக்கும் என்ற நிலையை இந்த ஸ்மார்ட் டாய்லெட்டுகள் மாற்றும் என உறுதியுடன் கூறுகின்றனர் ஸ்டப் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *