சார்பட்டா பரம்பரை படத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு

சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், டேன்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் ஓடிடி அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் குத்துச்சண்டை (ஜதை) ஆடுவதில் இருதரப்பு மோதிக்கொள்ளும் காட்சியோடு, அந்த காலத்து அரசியல் நிகழ்வுகளையும் பா.ரஞ்சித் உருவாக்கியிருந்தார். அதில், அவசரநிலை பிரகடனம், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி கலைப்பு, மிசாவில் ஸ்டாலின் கைது, எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவது போன்ற அரசியல் நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கும்.

அத்தோடு எம்.ஜி.ஆர் ஆட்சியில் சாராயம் விற்பவர்கள் கட்சியில் இணைவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருக்கும். சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, “சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. கண்டிக்கதக்கது. கலை மூலம் உண்மைகளை மறைப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம். சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரசார படமாகவே இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கும் விளையாட்டுத்துறைக்கும் எந்ததொடர்பும் இல்லை என்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்ட எம்.ஜி.ஆர் எத்தனையோ வீரர்களை விளையாட ஊக்குவித்தவர்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *