ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்காக மாநகராட்சியின் உத்தரவால் கிளம்பிய சர்ச்சை! – நடந்தது என்ன?

மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருவதை முன்னிட்டு சாலைகளை சீரமைத்து, தெருக்களை பராமரித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுரையில் 4 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 22-ம் தேதி மதுரை வருகிறார்.

இந்நிலையில் அவர் விமான நிலையத்திலிருந்து கிளம்பி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும் பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்தும், தூய்மையாக வைத்தும், தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும் என்றும், அவர் வருகையின்போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் சண்முகம் எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டிருந்தார்.

பொதுவாக பிரதமர், குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் என அரசில் உயர் அந்தஸ்தில் உள்ள வி.வி.ஐ.பி.கள் வரும்போது இதுபோன்ற உத்தரவுகள் இடப்படும் என்றும், எந்தவொரு அரசு பதவியில் இல்லாத தலைவருக்கு இது பொருந்துமா என்று சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவிக்கும் போது, ”இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவருக்கு செய்ய வேண்டிய அடிப்படை நடைமுறைகள்கதான் இது. வேற எந்த கூடுதல் ஏற்பாடும் இல்லை. உயர் பாதுகாப்பு பெற்றவர் செல்லும் சாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக சரியாக இருக்க வேண்டும். உயர் பாதுகாப்பு விஐபிகள் வரும்போது இதைப்போன்ற ஏற்பாடுகள் செய்வது நடைமுறையில் உள்ளதுதான். இது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வி.ஐ.பி செல்லும் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு வழக்கமாக சொல்வதுதான். அதற்காக உத்தரவு போடத்தேவையில்லை. புதிதாக வந்த உதவி ஆணையாளர் அப்படி பண்ணி விட்டார். மற்றபடி கூடுதலாக எந்த ஏற்பாடும் இல்லை. உயர் பாதுகாப்பு வி.ஐ.பி.களுக்கு செய்யும் வழக்கமான நடைமுறைதான்” என்றார்.

இதனிடையே மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராக பணிபுரிந்து வரும் சண்முகம், 21/7/2021 பிற்பகல் முதல் மதுரை மாநகராட்சி பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *