மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள்; நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் விவசாயிகள்!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை டெல்லியில் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். புதிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளாக இருக்கக்கூடிய காசிப்பூர், டிக்ரித், சிங்கு உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டமானது கடந்த நவம்பர் 26ஆம் தேதியில் இருந்து தொடங்கி இடைவிடாது நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 7 மாதங்களை இந்த போராட்டங்கள் நிறைவு செய்தாலும் 3 வேளாண் சட்டங்கள் என்பது இதுவரை திரும்ப பெறப்படாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் என்பது தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தின் அருகேயுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காலை சரியாக 11 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதையொட்டி டெல்லியின் முக்கிய எல்லைகள் மற்றும் நாடாளுமன்றம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் துணை ராணுவ படையினர் சிறப்பு காவல் படையினர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் அதேநேரத்தில் அதன் அருகிலேயே விவசாயிகளின் போராட்டமும் தொடங்க இருக்கிறது. இதனால் டெல்லி முழுவதும் இன்று உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *