கார்டூன் படங்களுடன் தயார் நிலையில் குழந்தைகளுக்கான கொரோனா வார்டுகள்

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 85 நபர்களுக்கும், காரைக்காலில் 12 நபர்களுக்கும், ஏனாமில் 8 பேரும், மாஹேவில் 7 நபர்களுக்கும் என மொத்தம் 112 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை. தற்போது மாநிலத்தில் 961 நபர்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாநிலத்தில் இதுவரை 1,17,193 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,19,935 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மூன்றாவது அலை இன்னும் ஏற்படவில்லை.ஏற்பட்டால் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக புதுச்சேரியில் கார்டூன் பொம்மைகள், குழந்தைகளை கவரும் விலங்குகளை வரைந்து கொரோனா அரசு  மருத்துவமனையில் குழந்தைகளின் பயத்தை போக்கும் வகையில் சிறப்பு வார்டுகள் தயாராகி வருகின்றன.

புதுச்சேரியில் கொரோனாவுக்காக சிறப்பு மருத்துவமனையாக இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாவது அலையின்போது மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் முழு வீச்சுடன் பணியாற்றினர். கொரோனாவுக்காக சிலர் உயிரையும் இழந்து சேவையாற்றினர். தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே கொரோனா குழந்தைகள் வார்டுகளை தயார் செய்து வருகின்றனர். இவ்வார்டுகளில் பயமின்றி குழந்தைகள் இருக்கவும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி சுகாதாரத்துறையுடன், கேர்மேக்ஸ் அறக்கட்டளை மற்றும் பெயின்ட் பாண்டிச்சேரி அமைப்புகள் உடன் இணைந்து வார்டுகளை புத்துயிரூட்டி உள்ளனர்.

நூறு படுக்கை வசதிகளுடன் இரு வார்டுகள் தற்போது தயாராகி வருகிறது. அனைத்து பணிகளும் இவ்வாரத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.வார்டினுள் நுழைந்தவுடன் சுவரெங்கும் கார்டூன் பாத்திரங்கள், குழந்தைகளை கவரும் விலங்கு பொம்மைகள், விளையாட்டுகள் என வரிசையாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *