6 மாவட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவைச் சேர்ந்த 6 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அவரது மகன் வ.து.ஆனந்த் மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சியினர் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில் முதலமைச்சரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை தஞ்சை, தருமபுரி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், குமரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அமமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது, 2001- 2006 அதிமுக ஆட்சியின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அவரது மகனும் அமமுக மாவட்ட செயலாளருமான ஆனந்தனும் இன்று திமுகவில் இணைந்தனர். மேலும் சேகர், முன்னாள் அமைச்சர் மகன் பட்டுக்கோட்டை செல்வமும் திமுகவில் இணைந்தனர்.

மேலும், அமமுகவில் இருந்து 14 ஒன்றியச் செயலாளர்கள், 4 நகரச் செயலாளர்கள், 10 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 3 கவுன்சிலர்கள் மற்றும் சேலம் மாவட்ட அமமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வெங்கடாச்சலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அவர்களைப் போல அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் திமுகவில் இணைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *