மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கலாம்:உயர் நீதிமன்றம்

கொரோனா நோய் தொற்று காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கொரோனா பரவலை தடுக்க 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

அதனால் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்படவில்லை எனவும் மாறாக மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தினமும் மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது தொடர்பாக திட்டத்தை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சத்துணவு வழங்குவதில் சிரமங்கள் இருக்கலாம் எனவும், குழந்தைகளுக்கு சத்துணவு வழ்ங்குவது தொடர்பாக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் பஞ்சாயத்துகள், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என அறிவுறுத்தி, மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *