மர்மங்கள் நீங்காத சுஷாந்த் சிங்கின் மரணம்… நீதி கேட்கும் ரசிகர்கள்!!

இந்திய திரையுலகில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் மர்ம மரணங்களுக்கு தற்போதுவரை விடை காணப்படவில்லை. அந்த வரிசையில் கடந்த ஆண்டு தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமும் ஓராண்டு ஆகியும் மர்மங்களும் புதிர்களும் நிறைந்ததாக உள்ளது.

பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம். இளம் நடிகர், நடிகைகளின் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பது உள்ளிட்ட அவர்களை அங்கு வளர விடாமல் செய்வதற்கான அனைத்து வேலைகளும் நடைபெறும். 2013-ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கில் சடலமாக காணப்பட்டார் பாலிவுட் நடிகை ஜியா கான். இன்றுவரை அவரின் வழக்கு நிலுவையில்தான் உள்ளது. இந்த வரிசையில் இப்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமும் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் எந்தவித திரை பின்புலமும் இல்லாமல் இந்தி சினிமாவில் நுழைந்தவர். இந்தி சீரியலில் நடித்து மக்களிடம் வரவேற்பு பெற்று பல தடைகளைக் கடந்த தன்னுடைய கடின உழைப்பால் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்தார். குறிப்பாக இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனியின் பயோ பிக் படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 34 வயதான சுஷாந்த் சிங் மரணம் தொடக்கத்தில் தற்கொலை எனக் கூறப்பட்டது. ஆனால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பிறகு சுஷாந்தின் மரணம் கொலையா தற்கொலை என பல சிக்கல்கள் கொண்ட வழக்காக மாறியது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்த வழக்கை தற்போது மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை,போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) மற்றும் அமலாக்கத்து,சிபிஐ என ஐந்து அமைப்புகளின் விசாரணையில் உள்ளது.

காவல் துறை விசாரணையில் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை என கூறப்பட்டது. சிபிஐ இந்த வழக்கு குறித்த விசாரணை முடிவுகளை வெளியிடவில்லை. என்சிபி பிரிவு போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்ற கோணத்தில் விசாரிக்கிறது, மற்றும் அமலாக்கத்துறை தற்போதுவரை இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆதாரத்தை கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில் மும்பை காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி சுஷாந்த் சிங் தந்தை பீகார் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்தநேரத்தில் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் அரசியலாக்கப்பட்டது. பின்னர் பீகார் மாநில அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அவருடைய முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் போதைப் பொருள் தடுப்பு போலீசார், அமலாக்க துறையினர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ஒரு மாத கால விசாரணைக்குப் பிறகு ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக இதுவரை 30 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோன், சாரா அலிகான், அர்ஜுன் கபூர் ஆகியோரும் விசாரிக்கப்பட்டனர். ஆனால் அவர்களிடம் எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

அரசின் முக்கியமான ஐந்து அமைப்புகள் விசாரணை மேற்கொண்ட பிறகும் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான மர்மங்கள் முடிவில்லாமல் முற்றுப்புள்ளியும் இல்லாமல் ஒரு ஆண்டினை முழுமையாக கடந்த பிறகும் தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *