மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

மலைக்கோட்டை கோயில் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் வகையில் உரிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என மாநில நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி திருவானைக்காவல் கோயில் தெப்பக்குளத்தில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் திருமஞ்சனகாவிரி என்ற மலட்டாற்றில் இருந்து தண்ணீர் நிரப்பும் பணியை மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசும் போது, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக் கோட்டை கோயில் தெப்பக் குளங்களில் தண்ணீர் எப்போதும் தேங்கியிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில் தெப்பக்குளங்களுக்கு தண்ணீர் வந்து, மிகை தண்ணீர் வெளியேற வசதி உள்ளது. இதே போல, மலைக்கோட்டை தெப்பக் குளத்துக்கு தண்ணீர் வருவதற்கும், அங்கிருந்து வெளியே செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

திருச்சி மாவட்டத்தில் கிராப்பட்டி கொல்லாங்குளம், எடமலைப் பட்டிப்புதூர், காளியம்மன் கோயில் குளம் மற்றும் பெரிய மிளகுபாறை, ராமச்சந்திர நகர், சின்ன மிளகுபாறை ஆகிய இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள குவாரிகள் ஆகியவற்றைச் சீரமைத்து, அதில் மழைக் காலங்களில் தண்ணீர் சேமித்து வைத்து, குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி, கோடைக் காலங்களில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் களையும் வகையில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் நந்த வனத்தில் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டு வரும் அடர் காட்டையும், எடமலைப்பட்டி கிராமத்தில் செல்வ காளியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணியையும், கருமண்டபம் அசோக் நகரில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளையும் அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *