சொந்த வீடு, வட்டித் தொழில்… நாகர்கோவிலில் பிச்சை எடுப்பவர்களின் ராஜபோக வாழ்க்கை

கொரோனா ஊரடங்கால் சாலையோர வியாபாரிகள், உணவகம் நடத்துபவர்கள், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதில் பலரும் கவனிக்க மறந்தவர்கள் பிச்சைக்காரர்கள். யாசகம் செய்வதே தொழிலாய் வாழ்பவர்களின் நிலையைக் கண்டு இரங்கிய நாகர்கோயில் மாநகராட்சி நிர்வாகம், தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் அளிக்க முன்வந்தது. இரந்து வாழ்பவர்கள் தங்குவதற்கு ஆயுர்வேதா கல்லூரி தயார் செய்யப்பட, உணவுக்கு அபய கேந்திரா அமைப்பு கை கொடுத்தது.

அப்போது ஒருவரை முகாமிற்கு அழைத்தபோது வர மறுத்த அவர் தனக்கு சொந்தமாக வீடு இருக்கிறது என கூறி நிர்வாகிகளை அதிர வைத்தார். வீடு எங்கே என்றால் அது கருங்கல் என்ற இடத்தில் உள்ளதாக கூறினார். அதற்கும் அவர் பிச்சையெடுக்கும் நாகர்கோயிலுக்கும் 25 கிலோ மீட்டர் தூரம். அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பிச்சையெடுக்க ஆட்டோவுக்கு 500 ரூபாய் கொடுத்து நாகர்கோயில் வருவேன் என அவர் கூலாக கூற தன்னார்வலர்கள் அதிர்ந்து போகினர். மீட்கப்பட்ட பல பிச்சைக்கார்களுக்கு சொந்தமாக குடும்பம், குழந்தைகள் உள்ளதாக தெரியவந்திருக்கிறது. அவர்கள் கைவிட்டதால் வேறு வழியின்றி யாசிப்பதை தொழிலாக்கிக் கொண்டதாக கூறியிருக்கிறார்கள்.

இன்னும் சிலர், பிச்சை எடுத்த பணத்தை வட்டிக்கு விடுவதாக கூறி அதிர வைத்துள்ளனர். இப்படி பல அதிரடி பின்னணியுடன் மீட்கப்பட்ட 49 பிச்சைக்காரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் இருவருக்கு மட்டும் தொற்று உறுதியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை கவனிப்பு மையத்திலேயே தங்கியிருக்குமாறும், அவர்களுக்கு உணவு தரப்படும் என்றும் மாநகராட்சி கூறியபோதும் பலரும் தாங்கள் வீட்டிற்கே செல்வதாக கூறி அங்கிருந்து நழுவிவிட்டனர்.

கடைசியில் இப்போது 4 பேர் மட்டுமே மாநகராட்சியின் முகாமில் இருக்கிறார்கள். ஆட்டோ பிடித்து வந்து பிச்சை எடுப்பது, வட்டிக்கு விடுவது என நாகர்கோயில் பிச்சைக்காரர்களின் சொகுசு வாழ்க்கையைக் கண்டு தன்னார்வலர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *