சோதனைக்காக 5 நிமிடம் நிறுத்தப்பட்ட ஆக்சிஜன் விநியோகம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை முயற்சியாக நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சப்ளை 5 நிமிடம் நிறுத்தப்பட்டது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பரிசோதனைக்காக ஆக்சிஜன் சப்ளையை 5 நிமிடம் நிறுத்திய மருத்துவமனை உரிமையாளரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் ‘பராஸ்’ என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகரில் மற்ற மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாலும், இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு அதிகம் இருப்பதாலும் இங்கு நோயாளிகள் அதிகமான அளவில் சிகிச்சைக்காக வருகிறார்கள்.

இந்த மருத்துவமனையின் உரிமையாளர் ஜெயின் பேசும் ஒரு வீடியோ வெளியானது. அதில், “ஆக்ரா முழுவதும் ஆக்சிஜன் இருப்பு இல்லை. அதனால், நோயாளிகளை வேறு மருத்துவமனைகளில் சேர்க்குமாறு கூறினோம். ஆனால் யாரும் மருத்துவமனையை விட்டு போக விரும்பவில்லை.

அதனால் நானே ஒரு ஐடியா செய்தேன். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் யார் உயிர் பிழைப்பார்கள், யார் உயிர் பிழைக்கமாட்டார்கள் என்பதை அறிந்துகொள்ள டெஸ்ட் செய்தேன். அதன்படி, ஏப்ரல் 26 அன்று காலை 7 மணியளவில் நோயாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த ஆக்சிஜனை ஒரு 5 நிமிடங்களுக்கு நிறுத்திவிட்டேன். உடனே 22 நோயாளிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்களின் உடல்கள் நீல நிறமாக மாறத் தொடங்கின. அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்பதை அறிந்தோம்.

இந்தச் சம்பவத்தை வைத்து அந்த நோயாளிகளால் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை அவர்களுக்கு உணரவைத்து, சிகிச்சையிலிருந்த மற்ற 74 நோயாளிகளின் உறவினர்களை அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சொந்தமாக எடுத்து வரச்சொல்லி வலியுறுத்தினேன்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை அச்சமுற செய்தது.

இதுகுறித்து மருத்துவமனை உரிமையாளர் ஜெயின் கூறுகையில், ”அந்த வீடியோவில் பேசியது நான்தான்.. ஆனால் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆபத்தில் உள்ள நோயாளிகளை கண்டறிந்து காப்பாற்றவே அப்படி செய்தேன். இதுவரை 7 நோயாளிகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 22 பேர் உயிரிழந்ததாக கூறுவதில் உண்மையில்லை” என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *