ஆம்புலன்ஸ் விபத்து: நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த ஆம்புலன்ஸ் விபத்தில், பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி நிறை மாத கர்ப்பிணி. இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சூழல் கடினமாக இருந்ததால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது, அதிகாலை 3 மணியளவில் ஆலத்தூர் அருகே சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்து சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமி, அவரது மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் அம்பிகா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி, புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீனா, ஆம்புலன்ஸ் உதவியாளர் தேன்மொழி ஆகிய மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு செவிலியர் மீனா கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, கர்ப்பத்தில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *