வன்முறையை தூண்டும் வகையில் பதிவு: கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக 77 இடங்களைப் பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்று 5 பேர் கொல்லப்பட்டதாகவும் பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்ததாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்த கங்கனா ரனாவத் “பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்கிறது. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்கவேண்டும்” என்று பதிவிட்டார்.

அதேபோல, கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருதவிகள் செய்துவரும் நடிகர் சோனு சூட்டை, ”அவர் ஒரு மோசடி பேர்வழி. அவர் உதவுவது பணம் சம்பாதிக்கத்தான்” என்று விமர்சித்திருந்தார்.

இதுபோன்ற, பதிவுகள் வன்முறையை தூண்டுகின்றன என்று ட்விட்டர் நிறுவனம் கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கம் செய்து அதிரடியாக நடவடிக்கையினை எடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *