அம்மா உணவகத்தை தாக்கிய திமுக நிர்வாகிகள்

சென்னை முகப்பேர் மேற்கு ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதாகைகளை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அம்மா உணவகத்தில் புகுந்த திமுகவை சேர்ந்த சிலர் ஜெயலலிதா படங்களை வைக்க கூடாது எனக்கோரி பதாகைகளை வீசியெறிந்தனர். மேலும், உள்ள இருந்த காய்கறி, மளிகை பொருட்களை எல்லாம் தூக்கி வீசியெறிந்தனர்.

இதையடுத்து, திமுக கட்சியினர் சிலர் தாக்கியதாக உணவக ஊழியர்கள் மதுரவாயல் போலீசாரிடம் புகார் கூறினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வைரலானதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே திமுகவினர் வன்முறை அராஜகத்தை தொடங்கியுள்ளதாக கருத்து கூறி வருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஏழை, எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது. மழை வெள்ள காலம் மற்றும் கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்’ எனப்பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்நிலையில், #அம்மாஉணவகம்காப்போம் என்ற ஹேஷ்டேக் உருவாக்குப்பட்டு டிவிட்டரில் வலைதளவாசிகளால் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *