சத்தமில்லா சாதனை – சத்தில்லா வேதனை!

1
கா.கலைச்செல்வன், கடலூர்
கே: உலகில் மிக மோசமான விலங்கு எது?
ப: ‘மனிதன் என்பவன் மிக மோசமான விலங்கினம்!’ – சொன்னவர், -ஃப்ரெட்ரிக் நீட்சே.
2
எல்.சஞ்சீவ், மதுக்கூர்
கே: திமுக – அதிமுக.. வித்தியாசம் என்ன?
ப: பல உண்டு… அதில் முக்கியமானது, வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் ஒறறுமையாய் இணைந்து செயல்படுவபவர்களைக் கொண்ட கட்சி, அதிமுக! ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும்.. ஒரே தந்தைக்கு பிறந்ததாக சொல்லப்பட்டாலும் அடித்துக்கொண்டு… கொலைபாதகம் வரை செல்லும் நபர்களைக் கொண்ட கட்சி திமுக!
3
ஜே. பிரிட்டோ, செங்கல்பட்டு
கே: ‘வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிரக சட்டசபையை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும்!’ என்கிறாரே திமுக தலைவர் ஸ்டாலின்?
ப: இச்சட்டை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வரவேற்கும்போது, எதற்காக எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? அப்படி எதிரானது உண்மை என்றால் நிச்சயம், அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வந்திருக்கும்.
அனைத்துத் தரப்பினரும் கண்டனம் தெரிவித்த, இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர பயந்த கட்சி திமுக! அப்படியான தீர்மானத்தை கொண்டுவந்தது அதிமுக!
4
எல்.லோகநாதன், தூத்துக்குடி,
கே: ‘திமுகவைப்போன்ற பலமான கட்சி, தமிழகத்தில் வேறு ஏதும் இல்லை!’ என்று அடிக்கடி சொல்கின்றனரே அக்கட்சியினர்?
ப: தொடர்ந்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்ததுதான் பலமா? தவிர, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தென் மாவட்டங்களில் அதிமுக தலைவர்கள் போட்டியிட்டு வென்றது உண்டு. ஆனால் கருணாநிதியோ, ஸ்டாலினோ அப்படி போட்டியிட்டிருக்கிறார்களா? பிறகென்ன வெற்று ஜம்பம்?
5
பி.கிருஷ்ணன், கோவை
கே: சட்டம் – நீதி.. இரண்டும் ஒன்றா?
ப: அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு சிறுவனை கொண்டுவந்து நிறுத்தினர் காவல்துறையினர். ஒரு கடையில் இருந்து பிரட் பாக்கெட் ஒன்றை திருடியதாக அச்சிறுவன் மீது குற்றச்சாட்டு.
நீதிபதி, “பணம் கொடுத்து வாங்கியிருக்கலாமே.. ஏன் திருடினாய்?” என்றார். அதற்கு சிறுவன் அழுதபடியே, “எனக்கு அப்பா கிடையாது. அம்மா நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரைக் கவனித்துக்கொள்வதற்காக எனது வேலையை விட வேண்டியதாயிற்று. இருவருக்கும் பசி. இன்று காலை முதல் பலரிடம் ஏதேனும் வேலை வேண்டும் என கேட்டேன். எவரும் தரவில்லை. வேறு வழியின்றி ஒரு பிரட் பாக்கெட்டை திருடிவிட்டேன்..!” என்றான்.
நீதிபதி, “நீதி மன்றத்திலுள்ள ஒவ்வொருவரும் நான் உள்பட அனைவரிடத்திலிருந்தும் பத்து டாலா் வசூலிக்கப்படவேண்டும். பட்டினியால் திருடிய அந்த குழந்தை மீது மனித நேயமே இன்றி, காவல்துறையில் புகார் அளித்த கடைக்காரர் ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும். இத்தொகை முழுதும் அந்த சிறுவனுக்கு வழங்க வேண்டும்!” என்று தீர்ப்பளித்தார்.
திருடியது குற்றம் என தட்டையாக சொல்வது சட்டம். எதற்காக திருடினான் என்பதை உணர்ந்து தீர்வளிப்பது நீதி.
6
ஹேமநாதன், தஞ்சை
கே: ‘தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க, பாமக ஆட்சிக்கு வரவேண்டும்!’ என்கிறாரே ராமதாஸ்!
ப: அட! எப்போதுமே, தனது மகன் அன்புமணிக்கு சீட் கிடைத்தால் போதும் என திருப்தி அடைவார்.. இப்போது அனைத்து மக்களைப் பற்றியும் யோசிக்கிறாரா?
7
ஏ.பழனியப்பன், திருப்பூர்
கே: சத்தமில்லா சாதனை என்றால் என்ன?
ப: மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கும், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலை பட்டப்ப படிப்பு சேருவதற்கான தகுதியில் தமிழ் சேர்க்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி முதல்வர் இ.பி.எஸ்., மத்திய அரசுக்கு கடிதம் எழுத, உடனே தமிழ் சேர்க்கப்பட்டது. இதுதான் சத்தமில்லா சாதனை.
அதே நேரம், 2013ம் வருடத்திலும் இதே தமிழ் புறக்கணிப்பு இதே கல்லூரியில் நடந்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. கூட்டணியில் இருந்து தி.மு.க. இது குறித்து வாய் திறக்கவே இல்லை.
இது சத்தமில்லா வேதனை!
8
ம.கதிரவன், மதுரை
கே: ரஜினி, அரசியலுக்கு வருவாரா? கமல், அரசியலில் நிலைப்பாரா?
ப: இரண்டும் நடக்காது. தவிர, ‘அரசியலுக்கு வந்தால், நான் கொலைகாரன் ஆயிடுவேன்!’ என்று பேட்டி கொடுத்தவர் ரஜினி.
‘எல்லாரோயும் சுட்டுக்கொல்லும் எண்ணம் வந்தால், ஒருவேளை நான், அரசியலுக்கு வரலாம்!’ என்றவர் கமல்.
9
ஆர்.சல்மான், மதுரை
கே: எத்தனையோ முயற்சி எடுத்தும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. மனம் சோர்வாக உள்ளது!
ப: சமீபத்தில் ஒரு புகைப்படம் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை – பேராவூரணி சாலைதான் அது.
கஜா புயலில் கடும் சேதத்தைச் சந்தித்த அந்தப் பகுதியில் கிட்டதட்ட அத்தனை தென்னை மரங்களும் வீழ்ந்தன. ஒட்டுமொத்த பகுதியே, வெற்றுத் தரையாக மாறியது.
இன்று விவசாயிகளின் நம்பிக்கையான கடும் உழைப்பால், அழகழகாய் தென்னைகள் வளர்ந்து நிற்கின்றன.
அந்த விவசாயிகள்… அந்த தென்னை மரங்கள்.. இவற்றை நினைத்துப் பாருங்கள்.. மனச்சோர்வெல்லாம் நீங்கும்!
10
செ.முருகன், பாண்டி
கே: தலைமை வகிப்பவர் எப்படி இருக்க வேண்டும்?
ப: எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன்..
ஒரு அரசன், தனது அமைச்சரிடம், “இந்த நாட்டிலேயே படு முட்டாள்கள் மூவர் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். மாலைக்குள், அந்த மூவரை கண்டறிந்து அழைத்துவா!” என அமைச்சரிடம் உத்தரவிட்டான்.
அமைச்சரும் முட்டாள்களைத் தேடித் தேடி அலைந்தான். இறுதியில், மரத்தின் நுனியில் இருந்து அடியை வெட்டிக் கொண்டிருந்த ஒரு முட்டாளைப் பிடித்துக் கொண்டுவந்தான். வேறு முட்டாள்கள் எவரும் அவன் கண்ணில் சிக்கவில்லை.
அரசனோ, “மூன்று முட்டாள்களை அழைத்துவரச் சொன்னால், ஒருவனை மட்டும் அழைத்து வருகிறாயே…” என சினந்தான்.
அப்போது அங்கிருந்த குடியானவன் ஒருவன், “அரசே! இங்குதான் மூன்று முட்டாள்கள் இருக்கிறார்களே.. பிறகென்ன பிரச்சினை” என்றான்.
அரசன், “மூன்று முட்டாள்களா..” என ஆச்சரியமாகக் கேட்டான்.
அதற்கு குடியானவன், “ஆம் அரசே! கிளையில் அமர்ந்து அடி மரத்தை வெட்ட முயன்றவன் ஒரு முட்டாள். எத்தனையோ வேலைகள் இருக்க, முட்டாள்களைத் தேடிச்சென்ற அமைச்சர் அடுத்த முட்டாள். அறிவாளிகளை தேடிக்கொண்டுவந்து நல்ல திட்டங்கள் தீட்ட நினைக்காமல் முட்டாள்களைத்தேட நினைத்த நீங்கள் ஒரு முட்டாள்!” என்றான்.
இந்தக் கதையைப் படித்தவுடன்… இணையவழியில் தி.மு.க. உறுப்பினர்களை சேர்த்த விவகாரம் – ஸ்டாலின் – பிகே… . எல்லோரும் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
11
எஸ். சையது அபுதாஹீர், கும்பகோணம்
கே: கொரோனாவைவிட ஆபத்தானது எது?
ப: தி.முக.தான்! அக்கட்சித் தைலவரே, ‘இந்த அரசு கொரோனாவைவிட திமுகவைப் பார்த்துதான் பயப்படுகிறது! என்கிறாரே! ‘நோய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுமே!’ என நல்ல அரசு பயப்படத்தானே செய்யும்..
12
எம்.ராகவன், தேனி
கே: பல தலைமுறைகளாக தமிழகத்தில் தமிழராகவே வாழ்ந்து, பேச்சு வழக்கில் மட்டும் பிற மொழியை பயன்படுத்துவோரை, தமிழர்களே இல்லை என்று சில, தமிழ் தேசிய அமைப்பினர் சொல்கிறார்களே!
ப: ஆங்கிலேய அரசை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் அனைவரும் அறிவோம். தெலுங்கு வம்சாவளியில் வந்து தமிழனாகவே வாழ்ந்து… மறையாமல் நம் மனதில் நிற்கும் அவனை, அடுத்தடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்டியவர் ம.பொ.சி.
வீரபாண்டிய கட்டமொம்மனின் வரலாற்றைக் கேள்விப்பட்ட அவர், அது குறித்து ஆராய்ந்து நாடகம் எழுதி வெளியிட்டார். அதுதான் பின்னால் சிவாஜி கணேசன் நடித்த படமாக உருவானது.
தமிழ் தேசிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் ம.பொ.சி., வீரபாண்டிய கட்டபொம்மனை தமிழனாகத்தானே பார்த்தார்!
அந்த பார்வைதான் அறிவு!
சத்தமில்லா சாதனை
தன்னம்பிக்கை
தமிழன்
அரசியல் – கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *