பட்டியல் இனத்தவருக்கு அவமானம்!: மழுப்பும் தி.மு.க.! நழுவும் கூட்டணி கட்சிகள்!

பட்டியல் இனத்து ஊராட்சித் தலைவியை, தி.மு.க.வினர் சாதிய வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த கொடுமை குறித்து தி.மு.க. தலைமை மழுப்புவதும், கூட்டணிக் கட்சிகள் நழுவுவதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. பட்டியலினத்தை சேர்ந்தவர்.
கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த படங்கள் சமூகவலைதளங்களில் பரவத்துவங்கியதுமே தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கையில் இறங்கியது. சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை வளையத்துக்குள் வந்தனர்.
‘தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்தான், சாதி ஆணவத்துடன் நடந்துகொள்வார். அவர்தான், ராஜேஸ்வரியை தரையில் அமரும்படி தொடர்ந்த கூறி வருகிறார். அவமானப்படுத்துகிறார்’ என்பது தெரியவந்தது.
இதற்கிடையே ராஜேஸ்வரி, மோகன் மீது புவனகிரி காவல்நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார்.
மேலும் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ், ஊராட்சிமன்ற செயலர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவும், ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினார்.
இந்த விவகாரம் குறித்து, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரியிடம் பேசினோம்.
அவர், “பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து இன்றுதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது. குற்றம் இழைத்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!” என்றார்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்காத ஊராட்சி செயலர் சிந்துஜாவை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்; அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரியை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன், எப்போதும் சாதி ஆணவத்துடன் செயல்படுவார். அவர், ‘பஞ்சாயத்து கூட்டத்தின் போது நீ தரையில்தான் உட்கார வேண்டும். நான்தான் அலுவல் அனைத்தையும் பார்த்துக்கொள்வேன்!’ என்று மிரட்டுவார்.
அதனால், நானும் கீழேயே உட்கார்ந்திருப்பேன்.
சுதந்திரதினத்தன்றும், ‘நான்தான் கொடியேற்றுவேன். நீ ஏற்றக்கூடாது’ என்று சொல்லி விடுவார். நானும் அனுசரித்து போவேன்!” என்றார்.
இது குறித்து சமூக ஆர்வலர் மோகன் கூறும்போது, “தமிழகத்தையே அதிரவைத்த இந்த சம்பவம் குறித்து உடனடியாக தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
ஆனால், இந்த வன்கொடுமையைச் செய்த தி.மு.க.வைச் சேர்ந்த மோகன் மீது, அக்கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடனடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை. தாமதமாகத்தான் அறிக்கை வெளியிட்டார். அப்போதும்கூட, தனது கட்சியைச் சேர்ந்த நபர் வன்கொடுமை செய்ததற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை! காலம் காலமாக சமூகநீதி பேசி வரும் தி.மு.க.வின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது!” என்றார் வேதனையுடன்.
அரசியல் பார்வையாளர் குமார், “தி.மு.க.வைப் போலவே, அதன் கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தில் கண்டும் காணாமல் இருக்கின்றன. பெயருக்காக கண்டன அறிக்கை வெளியிட்டார்களே தவிர, குற்றமிழைத்த மோகனை, தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும் என்று வேண்டுகோளாகக் கூட ஸ்டாலினுக்கு கூற அவர்கள் தயாராக இல்லை.
வரும் தேர்தலில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று வீராவேசமாக பேசும் கூட்டணிக் கட்சியினர், குற்றவாளி மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்ல தயங்குகிறார்கள்!” என்றனர்.
“இவங்க எப்பவுமே அப்படித்தான்!”
சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவம் குறித்து கூறும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்தவர்தான் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று தெரியவந்த பிறகும் அக்கட்சி நவடிக்கை எடுக்கவில்லை என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் அக்கட்சியின் இயல்பே அப்படித்தான் இருக்கிறது.
தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆர்.எஸ், பாரதி, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என்று தொடர்ந்து பலரும் ஒடுக்கப்பட்ட இனத்தவரை இழிவுபடுத்தித்தானே வருகிறார்கள்!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் 89-வயதான நாராயணப்பா எனும் முதிய தி.மு.க தொண்டர் கலந்துகொண்டார்.
அவரிடம் ஸ்டாலின், “ எந்த ஊர்?” என கேட்க, அவர், “ ஒசூர்” எனச் சொல்ல, உடனே ஸ்டாலின், “கவுடாவா?” என சாதி குறித்து கேட்டார். அந்த வீடியோ இன்னும் சமூகவலைதளங்களில் உலவுகிறது.
இப்படி தலைமை, இரண்டாம் கட்ட தலைவர்கள் என அனைவருமே சாதிவெறியோடு இருக்கிறார்கள்!” என்றார்.
 
இன்னொரு இழிவு!
தெற்குத்திட்டை விவகாரம் பரபரப்பா பேசப்படும் நிலையில், இன்னொரு போஸ்டர் படம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு பெண்மணியை, அதே கட்சியைச் சேர்ந்த, மதுரை மாவட்ட செயலாளர்) மூர்த்தி இழிவாக பேசினார் என்பதுதான் அந்த போஸ்டர்.
இது குறித்து மதுரை வட்டாரத்தில் விசாரித்தோம்.
நம்மிடம் பேசியவர்கள், “இந்த சம்பவம் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போத நடந்தது.
அப்போது, சோழவந்தான் (தனி) தொகுதி வேட்பாளராக, ஸ்ரீப்ரியா தேன்மொழி என்பவரை தி.மு.க. அறிவித்திருந்தது. அவரிடம் தேர்தல் செலவுக்கு பெரும் தொகை கேட்டார், மாவட்ட செயலாளர் பெ.மூர்த்தி.
அதற்கு ஸ்ரீப்ரியா, “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. தேர்தல் செலவுக்கு கட்சிதானே பணம் தரும். அதை வைத்து செலவு செய்யுங்கள். மீதிப்பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்!” என்றார்.
இதனால் ஆத்திரமான மூர்த்தி, “பறச்சிக்கு பதவி என்றால் இனிக்கிறது.. பணம் கேட்டால் வலிக்கிறதா?” என்றெல்லாம், சாதியைக் குறிப்பிட்டு தரம் தாழ்ந்து பேசினார்.
இந்த விவகாரம் கசிந்து, தலித் அமைப்பினர் மூர்த்தியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டினர்.
தி.மு.க. தலைமைக்கும் தெரிவித்தனர். ஆனால், தி.மு.க. தலைமையோ, ஸ்ரீபிரியா தேன்மொழியை திரும்பப் பெற்று, சி.பவானி என்கிற பெண்மணியை வேட்பாளராக்கி விட்டது.
இதுதான் சமூக நீதிக்கு தி.மு.க. கொடுக்கும் மரியாதை!” என்றனர் வேதனையுடன்.
பாக்ஸ் C
“மிரட்டல் ஆயுதம்தானா திருமா?”
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடந்த பத்தாம் தேதி, தனது முகநூல் பக்கத்தில், ‘பஞ்சமி நிலத்தை மீட்போம்! பழந்தமிழ்க் குலத்தைக் காப்போம்!’ என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இது அரசியல் வட்டாரத்தில் அரசியல் வட்டாரத்தில், “பஞ்சமி நிலம் குறித்து அவ்வப்போது திருமாவளவன் குரல் கொடுத்து வருவார். ஆனால் சமீபகாலமாக அமைதியாக இருந்தார்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில்தான், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான, ‘முரசொலி’ இதழின் அலுவலகம் இருக்கிறது. இந்த இடம், பஞ்சமி நிலம் என்கிற சர்ச்சை கிளம்பியது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ‘குறிப்பிட்ட அந்த இடம் பஞ்சமி நிலம்தான். இல்லை என்று தி.மு.க.வால் மறுக்க முடியுமா? தைரியம் இருந்தால் அந்த இடத்தின் மூலப்பத்திரத்தை வெளியிடட்டும்!’ என்று சவால் விடுத்தார்.
தவிர, பா.ஜ.க. தரப்பில் இது குறித்து எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இந்த இடத்தின் மூலப்பத்திரத்தை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து திருமாவளவனும் பேசவில்லை.
சமீப நாட்களாக, ‘வரும் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. இருநூறு இடங்களில் போட்டியிடும். தேசிய கட்சிகலைத் தவிர இதர கூட்டணிக் கட்சிகளும், தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்!’ என்று அக்கட்சி தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு வி.சி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், ‘நாங்கள் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்!’ என்று கூறியிருக்கின்றன.
ஆனால், உதயசூரியன் சின்னத்தில்தான் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில்.. அதாவது தி.மு.க. தலைமையை மிரட்டும் விதத்தில்தான் மீண்டும் பஞ்சமி விவகாரத்தை திருமாவளவன் கையில் எடுத்திருக்கிறார்!
ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஆதாரமே நிலங்கள்தான். அந்த விசயத்திலும் திருமா அரசியல் செய்யலாமா?” என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *