கொலை மிரட்டல், நிர்வாண படம், ஸ்டாலினுடன் மோதல்: தனசகரனுக்கு அரிவாள் வெட்டு!

தி.மு.க. செயற்குழு உறுப்பினர் தனசகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவரது டெரர் முகத்தை, சென்னை கே.கே.நகர் பகுதியில் தெரியாதவர்களே இருக்க முடியாது.
அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு என இவரது ‘பலே’ நடவடிக்கைகள் அப்படியானது.
2011, 2016 தேர்தல்களில், தி.மு.க. சார்பில் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். காரணம், இவர் மீது மக்களுக்கு இருக்கும் பயம்தான்.
இந்த நிலையில்தான், கடந்த 13ம் தேதி, இவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகாயம் அடையச்செய்து, எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இது குறித்து கூறும் பகுதி மக்கள், “கடந்த 13ம் தேதி , கே.கே.நகரில் உள்ள தனது அலவலகத்தில் தனசேகரன் இருந்தார். அப்போது திடுமென அங்கு நுழைந்த மர்ம நபர்கள், ஆவேசக்கூச்சலுடன், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனசேகரனை ஆவேசமாக வெட்டினர். அப்போது அங்கிருந்த அவரது உதவியாளர் அமுதாவுக்கும் காயம் ஏற்பட்டது.
தனசேகரன் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட, அவரது உதவியாளர் அமுதா, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!” என்கின்றனர்.
காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில், ‘தனசேகரனின் உதவியாளர் அமுதாவின் கணவர் பொன்வேல் மற்றும் அவரது நண்பர் இருவரும்தான், அரிவாளால் வெட்டினர்’ என்பது தெரியவந்திருக்கிறது.
இது குறித்து தனசேகரனின் தரப்பினர், “அமுதாவுக்கும், அவரது கணவர் பொனவேலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்த நிலையில்தான், சம்பவத்தன்று அலுவலகத்தில் அமுதா வேலை பார்த்துக்கொண்டிருந்தார். மதிய வேளை என்பதால், உணவுக்கு பின்பு, மாடியிலுள்ள அறையில் தனசேகரன் தூங்கிக்கொண்டிருந்தார் தனசேகரன். அப்போதுதான், அலுவலகத்தில் புகுந்து, அமுதாவை பொன்வேலும் அவரது நண்பரும் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டுக் கீழே வந்த தனசேகரன் அந்த இருவரை தடுத்தார். அப்போது அவரையும் வெட்டினர்!” என்கிறார்கள்.
அதே நேரம், “ அமுதாவுக்கும் அவரது கணவர் பொன்வேலுவுக்கும் பிரச்சினை இருப்பது உண்மையே. ஆனால் பொன்வேலுவை தூண்டி விட்டவர்கள் வேறு நபர்களாகவும் இருக்கலாம். காரணம், தனசேகரனின் பின்னணி டெரரானது. அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என பல விவகாரங்களில் தனசேகரனுக்கு தொடர்பு உண்டு. குறிப்பாக, அதே தி.மு.க.வைச் சேர்ந்த தாதா தமிழ்ச்செல்வன், இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம்!” என்று அதிரவைக்கிறார்கள்.
அது என்ன விவகாரம்?
சென்னை கே.கே.நகர் 8-வது செக்டாரைச் சேர்ந்தவர் ஶ்ரீகுமார். ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுபவர்.
இவர், கடந்த வருடம் ஆகஸ்ட் 31-ம் தேதி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘எனது வீட்டிலிருந்து வடபழனியிலுள்ள வணிக வளாகத்துக்குச் செல்வதற்காக, `ரேபிடோ’ ஆப் மூலம் பைக் டாக்ஸி பதிவுசெய்தேன். நீண்டநேரம் காத்திருந்தும் பைக் வரவில்லை.
அப்போது, ஒரு காரில் வந்த சிலர் என்னருகே காரை நிறுத்தி, ‘பைக் டாக்சி எதுவும் ப்ரியா இல்லை. கம்பெனில இருந்து கார் அனுப்பியிருக்காங்க.. வாங்க!’ என்றனர். இதை நம்பி, காரில் பயணமானேன்.
ஆனால், கார் வடபழனி செல்லாமல் கிண்டி நோக்கிச் சென்றது. நான் கேட்டதற்கு, கத்தியைக் காட்டி மிரட்டி, என்னிடமிருந்து 11,000 ரூபாய் பணத்தைப் பறித்தது அந்த கும்பல்.
மேலும், எனது உடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தது. பிறகு என் வீட்டருகே இறக்கிவிட்டு, ‘ 50,000 ரூபாய் கொடுத்தால், வீடியோவ அழிச்சிருவோம். இல்லேன்னா இணையத்தில வெளியிட்டுவிடுவோம்!’ என அந்த கும்பல் மிரட்டியது’ என புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்கு பதிந்த கே.கே.நகர் போலீஸார், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன், கே.கே.நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரைக் கைது செய்தனர். இதில், சரவணன் `ரேபிடோ’ ஆப் நிறுவனத்தில் பணியாற்றுபவர். இவர் மூலமாகவே, ஶ்ரீகுமார் பைக் டாக்ஸிக்காக நிற்பது தெரிந்துகொண்டு, மூவரும் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இம்மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூவர் கும்பலில் தலைவனாக செயல்பட்டவர்தான், தமிழ்ச்செல்வன் .
தி.மு.க பிரமுகரான இவர், தனசேகரனின் தீவிர ஆதரவாளர்.
தனசேகரனின் கட்டப்பஞ்சாயத்து அடிதடிகளில் இவருக்கும் பங்கு உண்டு. இவரது அண்ணன் திருநாவுக்கரசுவும் தி.மு.க-வைச் சேர்ந்தவர் – தனசேகரனின் ஆதரவாளர்.
கடத்தல் மற்றும் நிர்வாண வீடியோ விவகாரத்தில் சிறைக்குச் சென்ற தமிழ்ச்செல்வனை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு தனசேகரன்தான் உதவினார்.
இதற்கிடையே தனசேகரனின் பிறந்தநாள் வர, அப்போது தமிழ்ச்செல்வன் சிறையில் இருந்தார். அவர் சிறையில் இருந்து வந்தவுடன், தனசேகரின் பிறந்தநாளை (மீண்டும்) பிரம்மாண்டமாக கேகே நகரில் கொண்டாடினார். நள்ளிரவில், கேக், வெடி, மது விருந்து என ஏரியாவே பரபரத்தது.
கொலை மிரட்டல், ஆபாச வீடியோ, பணப்பறிப்பு என அலையும் கும்பலுடன், தனசேகரன் பிறந்தநாளை படாடோபமாக கொண்டாடியது, ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கும் அவமானம் என்று அப்போதே பலரும் வருத்தப்பட்டனர்.
அந்த விவகராத்துக்குப் பிறகு தமிழ்ச் செல்வனுக்கும், தனசேகரனுக்கும் சில மோதல்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில்தான் தனசேகரன் வெட்டப்பட்டு உள்ளார்” என்றனர்.
இந்த விவகாரம் குறித்து கூறப்படும் இன்னொரு கோணம் மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.
இது குறித்து கூறுவோர், “ சமீபகாலமாகவே, தனது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தனசேகரன் நேரடியாக மோதி வந்தார். கடந்த ஆகஸ்ட் 13 அன்று, சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் ஜூம் மீட்டிங்கில் பேசினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது தனசேகரன், `ராமநாதபுரத்தில் உங்கள்மீது அதிருப்தியில் உள்ளனர். நீங்கள் மாவட்டச் செயலாளர் சொல்வதையே கேட்பதாக சொல்கிறார்கள்’ என்றார்.
இந்த குற்றச்சாட்டினால் அதிர்ந்த ஸ்டாலின், ‘அப்படிச் சொன்னவர்களில் இரண்டு பேர் பெயரை மட்டும் சொல்லுங்கள்’’ என்று ஆவேசமாக கூறினார். மேலும், ‘தனசேகர், உன்னைப் பற்றி நிறைய புகார் வருது. போனா போகிறதுன்னு விட்டு வெச்சிருக்கேன். உங்க ஏரியாவுல கட்சி ஆபீசையே இழுத்துப் பூட்டி வெச்சுருக்கே! பார்த்து நடந்துக்கோ!’ என்று ஆத்திரத்துடன் எச்சரித்தார்.
ஸ்டாலின் நண்பர் அண்ணா நகர் ரமேஷ், கடத்தல் வழக்கு ஒன்றில் சிக்கினார். இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.
அதே போல 2ஜி வழக்கில் சிக்கிய ஆ.ராசாவின நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டார்.
ஆகவே தனசேகரன் தாக்கப்பட்ட விவகாரத்தில் பல கோணங்கள் இருக்கின்றன!” என்றார்கள்.
எப்படியானாலும் குற்றம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
“கட்சி விவகாரத்தால் கொல்லப்பட்ட தா.கிருஷ்ணன்!”
உட்கட்சி விவகாரத்தால் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் மரணத்தை பலரும் நினைவுகூறுகிறார்கள்.
அவர்கள் இது குறித்து கூறும்போது, “திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி மதுரை கேகே நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்திய அண்ணா நகர் போலீசார் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, திமுக நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்பட 13 பேரை கைது செய்தனர். மு.க. அழகிரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
ஸ்டாலின் அணியைச் சேர்ந்த அவரை சிவகங்கை மாவட்டச் செயலாளராக வர விடாமல் தடுக்க, மு.க.அழகிரி அணியில் தீவிரமாக முயன்றனர். ஆனால், அவருக்கே தொண்டர்கள் ஆதரவு இருந்தது.
மேலும், மதுரை மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஸ்டாலின் ஆதரவாளரான வேலுச்சாமியை கொண்டு வர த.கிருஷ்ணன் முயன்றார். இதுவும் அழகிரி தரப்பிரை ஆத்திரமடைய செய்தது.
‘உங்கள் உத்தரவுப்படியே தா.கியை கொலை செய்தோம்’ என அழகிரிக்கு ஒரு கடிதத்தில் எஸ்ஸார் கோபி குறிப்பிட்டதும் அம்பலமானது.
இந்நிலையில்தான் தா.கி. கொலை செய்யப்பட்டார்.
அதே நேரம், இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று மு.க. அழகிரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் அழகிரிக்கும் தா.கி.க்கும் இருந்த கட்சிப் பூசலை யாரும் மறக்கவில்லை!” என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *