பாசத்தாய்! : கதறியழுத இ.பி.எஸ்.!

தமிழக முதல்வர் இ.பி.எஸ்ஸின் தாயார், தவுசாயம்மாள், தனது 93 வயதில், வயது முதிர்வு காரணமாக எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில் மறைந்தார்.
அவரது உடல் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
தாயாரின் மறைவு குறித்து தகவல் அறிந்த முதல்வர் இ.பி.எஸ். உடனடியாக, சென்னையில் இருந்து கார் மூலம், கிராமத்துக்கு விரைந்தார்.
தாயாரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவர், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, முதல்-அமைச்சருக்கு அவரது குடும்பத்தினரும், அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியினரும் ஆறுதல் கூறினர்.
அந்த துயரமான சூழலிலும், இ.பி.எஸ்., “கொரோனா காரணமாக பலரும் வர சிரமப்படுவார்கள் ஆகவே விரைந்து இறுதிச்சடங்கை நடத்துங்கள்!” என்று கூறவிட்டார்.
பிறகு தவுசாயம்மாளின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பிறகு வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காவிரி கரையோரம் உள்ள மயானத்திற்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது முதல்வர் இ.பி.எஸ்., நடந்தே சென்றார். பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்தியும் அவர், காரில் ஏறவில்லை
இ.பி.எஸ்ஸை அலைபேசியிலும் பலர் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினர். அவர்களிடம், அழுதகொண்டே பேசினார் இ.பி.எஸ்.
இந்தக் காட்சியைக் கண்டவர்கள் நெகிழ்ந்துபோனார்கள்.
அப்பகுதி மக்கள் இது குறித்து கூறும்போது, “இ.பி.எஸ்ஸின் பெற்றோர் கருப்ப கவுண்டர் – தவசியம்மாள் தம்பதி மிக எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிரமமான சூழலிலும் தங்கள் பிள்ளைகளை கல்லூரி வரை படிக்கவைத்தனர். தனது மகன் முதல்வர் பதவி வகித்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகிவந்தார் தவுசாயம்மாள்.
இறக்கும் முன்புகூட, ‘என் மகன் பழனிசாமி சிறு வயது முதல் ஏழை- எளிய மக்களோடு பழகியவன்; பொதுமக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணர்ந்தவன். 4 மைல் தொலைவிருக்கும் பள்ளிக்கு, தினமும் நடந்தே சென்று வந்தான். பிறகு குமாரபாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தான். தினமும் காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று வர சிரமப்பட்டான். அவனுக்கு பிறரது கஷ்டம் புரியும். தொடர்ந்து நல்லாட்சி தருவான். அதற்கு இறைவன் அருள் புரிவார்!’ என்று கூறினார்!” என்று நெகிழ்ந்து கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *