இ.பி.எஸ். அதிரடி ஆட்டம்!ஒட்டுமொத்த ஓட்டுக்களை அள்ள அ.தி.மு.க. பலே ப்ளான்!

‘சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகிவிட்டது அ.தி.மு.க.!’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள், “தனது நிர்வாக பணிகளுடன் பல மாதங்களுக்கு முன்பே, தேர்தல் வியூகங்களையும் வகுக்க ஆரம்பித்துவிட்டார் முதல்வர் இ.பி.எஸ்.
அதன்படிதான் தமிழகம் முழுதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கட்சியின் ஐ.டி.விங் பலப்படுத்தப்பட்டது.
தற்போது, தேர்தல் பிரசார வியூகக் குழு, தேர்தல் பணிக் குழு, கூட்டணி பேச்சு குழு போன்றவற்றை அமைக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார் இ.பி.எஸ்.
விரைவில், தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது, உள்ளூரில் மக்கள் செல்வாக்குடன் இருக்கும், அரசியல் சாராத புள்ளிகளை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு வருமாறு அழைக்க இருக்கிறார். தேவையற்ற ஈகோ பார்க்காமல், எளிமையான முதல்வர் என்று பெயர் பெற்றுள்ள இ.பி.எஸ். அழைக்கும்போதும் நிச்சயமாக எவரும் மறுக்க மாட்டார்கள். தவிர, சம்பந்தப்பட்ட புள்ளிகளே, இ.பி.எஸ்ஸின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். ஆகவே இவர்கள் அ.தி.மு.க.வை நோக்கி வருவார்கள். இது கட்சிக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கும்.
‘சேர்ப்பவரை சேர்க்க வேண்டும்’ என்பதோடு, ‘சிலரை அங்கங்கேயே இருங்கள்’ என்றும் சமிக்ஞை கொடுத்திருக்கிறது இ.பி.எஸ். தரப்பு.
அதாவது, பிற கட்சிகள்.. குறிப்பாக அ.ம.மு.க.வில் இருந்து பல நிர்வாகிகள், அ.தி.மு.கவுக்கு வர தூதுவிட்டபடி இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, கட்சியில் சேர்க்கும்படி உத்தரவிட்ட இ.பி.எஸ்., வேறு சிலரை, ‘அங்கேயே இருந்து நமக்கான வேலைகளைப் பார்க்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
இது அவரது அரசியல் ராஜதந்திரத்தையே காண்பிக்கிறது. சில அ.ம.மு.க. புள்ளிகள், அ.தி.மு.க.வுக்குள் வந்தால், உடனடியாக கட்சிப் பதவிகளை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்களை ஏற்கும் மனநிலையில், அ.தி.மு.க. தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். அது போன்றவர்களை புறக்கணிக்கவும் கூடாது என்பதற்காக, ‘அங்கேயே இருந்து நமக்கான பணிகளைப் பாருங்கள்’ என்று சொல்லப்பட்டுள்ளது.
இ.பி.எஸ்ஸின் இந்த அதிரடி ஆட்டம், நல்ல பலனைக் கொடுக்கும்.
இதற்கிடையே நிர்வாக ரீதியாகவும், இ.பி.எஸ்ஸின் உரிமைக் குரல் வழக்கம் போல ஓங்கி ஒலிக்கிறது.
கர்நாடக மாநிலத்தில், கணிசமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காக, பல்வேறு மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் வழி பள்ளிகளை கர்நாடக அரசு, நடத்தி வருகின்றது. இத்தகைய தனியார் பள்ளிகளுக்கான ஒப்புதல் மற்றும் மானியம் ஆகியவற்றையும் கர்நாடக அரசு அளிக்கிறது.
இந்நிலையில், இந்த பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள், கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. தவிர, புதிய தனியார் (தமிழ்) பள்ளிகளைத் தொடங்க கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இது குறித்து கர்நாடகா தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கவலை தெரிவித்தது.
இந்தத் தகவல் வெளியான உடனேயே, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு, தமிழக முதல்வர் இ.பி.எஸ். கடிதம் எழுதினார்.
அதில், கர்நாடக மாநில வளர்ச்சிக்காக தமிழர்கள் ஆற்றிருவம் செயல்களைக் குறிப்பிட்டவர், ‘கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்; தமிழ் வழியில் படிக்கத் தனியார் பள்ளிகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்க வேண்டும்; . வேறு மொழிவழிப் பள்ளிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளை மீண்டும் தமிழ்வழிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, கர்நாடக அரசு தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உரிமையை வலியுறுத்தும் அதே நேரம், தமிழகத்துக்கான கடமைகளையும் மிகச் சரியாக செய்து வருகிறார் இ.பி.எஸ்.
இதற்கு ஒரு உதாரணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 14 நிறுவனங்களுடன் இ.பி.எஸ். மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்!
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க திட்டமிட்டார் முதல்வர் இ.பி.எஸ்.
இதன் முதல்வபடியாக, இது போன்ற நிறுவனங்களை ஈர்க்க, அரசு சார்பாக சிறப்பு குழு ஒன்றை அமைத்தார். இந்த குழுவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தனர். மேலும், தொழில் துறையினருக்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள், வாய்ப்புகள் குறித்து விளக்கினர்.
இதையடுத்து பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது மேலும் 14 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன.
முதல்வர் இ.பி.எஸ். முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த 14 நிறுவனங்களுடனான ரூ.10,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உள்ளிட்டவை இவை.
இவற்றில், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படுகிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும், அப்போலோ டயர்ஸ் ஓரகடத்திலும் அமைய உள்ளது. மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன.
இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில், ஒட்டுமொத்த உலகமும் தொழிற்துறையில் முடங்கிக் கிடக்க… தமிழகத்திலோ, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அரசுடன் கையெழுத்தாகி உள்ளன. இது இ.பி.எஸின் நிர்வாக திறமைக்கு ஒரு உதாரணம்.
மேலும், சுகாதாரத்துறையிலும் தமிழகத்தை முக்கிய இடத்துக்கு கொண்டுவந்துள்ளார் முதல்வர் இ.பி.எஸ்.
அமெரிக்க அதிபர் டிரம்புக்குக்கு கொடுக்கும் ரெம்டெசிவிர் என்றவிலை உயர்ந்த மருந்து தமிழகத்தில் சாமானிய மக்களுக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
இந்த விசயம் பலருக்கும் தெரியாது. ‘இது நமது கடமை.. இதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்?’ என்று சொல்லிவிட்டார் இ.பி.எஸ்.
பெண் பணியாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் நலன் மீது இ.பி.எஸ்ஸுக்கு இருக்கும் அக்கறை சமீபத்திய உத்தரவு ஒன்றின் மூலமும் வெளிப்பட்டது.
அது…
தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது.
இதில், ‘வேலை அளிப்பவர்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும். கட்டுமானத்தில் ஈடுபடும் தொழிலாளரை மருத்துவர் பரிசோதனை செய்து பணியில் ஈடுபட தகுதியானர் என்று சான்று அளித்தால் மட்டுமே அவரை பணியில் சேர்க்க முடியும்.
இருபதுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணி புரியும் இடங்களில் அவர்களின் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரு அறைகள் ஏற்படுத்த வேண்டும். அதில் ஒரு அறை குழந்தைகளை விளையாட்டு அறையாகவும், மற்றொரு அறை ஓய்வு அறையாகவும் இருக்க வேண்டும். விளையாட்டு அறையில் போதுமான விளையாட்டு சாதனங்களும், ஓய்வு அறையில் கட்டிகள் மற்றும் படுக்கை வசதி இருக்க வேண்டும்.
மேலும் காலை 6 மணிக்கு முன்பு மற்றும் இரவு 7 மணிக்கு பின்பு பெண் பணியாளர்களை பணியில் ஈடுபட அவர்களின் அனுமதியை பெற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிர்வாகம், நிதி, மக்களுக்கான உதவி… இப்படி அனைத்து தரப்பிலும் சிறப்பாக செயல்படும் முதல்வர் இ.பி.எஸ். ஆட்சியே மீண்டும் மலரும்!” என்கிறார்கள் அதி.மு.க. நிர்வாகிகள்.
லீட்:
“பிற கட்சிகளில் இருந்து பல நிர்வாகிகள், அ.தி.மு.கவுக்கு வர தூதுவிட்டபடி இருக்கிறார்கள். அவர்களில் சிலரை, கட்சியில் சேர்க்கும்படி உத்தரவிட்ட இ.பி.எஸ்., வேறு சிலரை, ‘அங்கேயே இருந்து நமக்கான வேலைகளைப் பார்க்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *