தனி அணி! சிதறும் தி.மு.க. கூட்டணி!

“வாருமய்யா.. நியூஸாரே!”
“வந்தோம்.. வந்தோம்…! செய்திக்குள் போகலாமா?”
”தாராளமாக..!”
“அ.தி.முக., சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகிவிட்டது! கட்சிக்குள் நிர்வாகக் குழுக்கள் அமைக்கப்படுவது குறித்து கடந்த இதழிலையே செய்தி வெளியிட்டிருந்தீர். இப்போது தேவையற்ற சர்ச்சைகளை கூட்டணி கட்சிகளே முன்வந்து போக்கி வருகுன்றன. அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க. தரப்பில் சிலர் பேச, இதற்கு அ.தி.மு.க. தரப்பில் தெளிவாக பதில் அளிக்கப்பட்டது. ‘தேசிய கட்சியோ, மாநில கட்சியோ… இ.பி.எஸ். அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன்தான் கூட்டணி!’ என்று அதிரடியாக சொல்லப்பட… இந்த தேவையற்ற விவகாரம் அப்படியே அமுங்கிவிட்டது!”
“முதல்வர் இ.பி.எஸ்ஸை பாஜக மாநில தலைவர் முருகன், சந்தித்தரே…!”
“ஆமாம்.. . முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார் .முருகன். இது குறித்து அவர், ‘மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ஆதரித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிக்க சந்தித்தேன்’ என்றவர், ‘முதல்வர் வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்க சந்தித்தேன்’ என்று அழுத்திச் சொன்னார்!”
“கவனித்தோம்…! வீண் யூகங்களை பரப்ப முயற்சித்தவர்களின் வாயை இது அடைத்துவிட்டது!”
“ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினர் ஆகலாம் என அக்கட்சி அறிவித்த திட்டம் படு காமெடியாக ஆகிவிட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட, வெளிநாட்டு தலைவர்கள் பெயர்களில் எல்லாம், உறுப்பினர் அட்டை வாங்கி, கலாய்த்துவிட்டார்கள் தமிழக மக்கள். இந்த நிலையில், ‘ஒட்டுமொத்தமாகவே இந்த ஆன்லைன் உறுப்பினர் அட்டை, டுபாக்கூர்தான்!’ என்ற தகவல் வெளியாகி, உடன்பிறப்புகளை அதிரவைத்துள்ளது!”
“அதென்ன விவகாரம்?”
“உறுப்பினர் மற்றும் அந்தப் பகுதி கட்சி நிர்வாகியின் கையெழுத்து இருந்தால்தான் அட்டைக்கு மதிப்பு. இதில் அதெல்லாம் இல்லை. ஆகவே இதை வைத்து தி.மு.க. உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. அதாவது இந்த உறுப்புனர் சேர்ப்பு என்பதே, ஒரு டூபாக்கூர் வேலை. இந்த விசயம் உடன்பிறப்புகளுக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. ஆகவே உடன்பிறப்புகள் விரக்தியில் இருக்கிறார்கள். ‘இருக்கிற வேலையில் இதுபோல் வீணாக டார்ச்சர் செய்கிறார்களே..’ என்று புலம்புகிறார்கள்!”
“அடப்பாவமே…!”
“2ஜி வழக்கு விசாரணை டில்லி உயர் நீதிமன்றத்தில் வேகமெடுத்துள்ளது. கீழ் கோர்ட்டில் அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த ஆசீர்வாதம் ஆச்சாரி, முன்னாள் தகவல் தொடர்புத்துறை செயலாளர் டி.ஸ். மாத்தூர், மறைந்த முன்னாள் அட்டார்னி ஜெனரல் வாகன்வதி ஆகியோ மூவரின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே, சி.பி.ஐ., மேல் முறையீடு செய்திருக்கிறது. இதுவே வலுவாக இருப்பதால் வெற்றி கிடைக்கும் என நினைக்கிறது. விரைவில் தீர்ப்பு வரும். அது வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மேலும் பின்னடைவைத்தரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!”
“ம்…”
“அதே போல தயாநிதி மாறன் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கையும் மீண்டும் தூசி தட்டுகிறது சிபிஐ தரப்பு மேலும், துரைமுருகன் தரப்பினரிடமிருந்து கட்டுக்கட்டாக பணம், கைப்பற்றப்பட்டது அல்லவா… அது குறித்த விசாரணையும் சூடு பிடிக்கப்போகிறது!”
“ஆக, இது திமுகவுக்கு படு சிக்கலான காலம் என்று சொல்லும்!”
“இன்னொரு சிக்கல், கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம். தனது கூட்டணிகட்சியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள் ஆகிய தேசிய கட்சிகளைத் தவிர, ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் அனைத்தும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதயாக இருக்கிறது!”
“ஆனால், அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘200 இடங்களில் தி.மு.க.வே போட்டியிடப்போகிறது என்றெல்லாம் சில ஊடகங்கள் வேண்டுமென்றே தகவல் வெளியிட்டு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றன..’ என்று அறிக்கை விட்டிருக்கிறாரே..!”
“அவரது அறிக்கையை கூட்டணிக் கட்சிகள் நம்பவில்லை. ஏனென்றால்,. எந்த ஊடகமும் இது குறித்து யூகச் செய்தியாக வெளியிடவில்லை. ‘200 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும்’ என்று உதயநிதி முதற்கொண்டு, அக்கட்சி பிரமுகர்கள்தான் சொல்ல ஆரம்பித்தார்கள். தவிர கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட, தனது சின்னத்தில்தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டும் என தி.மு.க. நிர்ப்பந்தித்தும், அது அரைகுறையாக நடந்ததும் உலகறிந்த விசயம்தானே!”
“சரி, இப்போது தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ரியாக்சன் என்ன?”
”ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுச்செயலர் அபுபக்கர் ஆகியோர் வெளிப்படையாகவே, ‘தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்’ என்று அறிவித்துவிட்டார்களே. தவிர, இருவரும் சீக்ரெட்டாக அலைபேசியில் நீண்ட உரையாடல் நடத்தி இருக்கிறார்கள். அப்போது, ‘நம்மை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்லி தி.மு.க. அவமானப்படுத்துகிறது. அதே போல இரு கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மிகக் குறைந்த சீட்தான் தருவோம் என இப்போதே திமுக சொல்லி வருகிறது. ஆகவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போல் இப்போதும் தனித்து கூட்டணி அமைப்போம். நமக்கு வெற்றியோ தோல்வியோ, தி.மு.க.வுக்கு நமது முக்கியத்துவம் புரியும்!’ என்று பேசியிருக்கிறார்கள்!”
“ஓ… !”
“ஆனால், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிசோர் ஏகத்துக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அதாவது, ‘தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் தி.மு.க வெல்லும்!’ என ஏதேதோ புள்ளி விவரங்களைச் சொல்லி விளக்க, அதை மு.க.ஸ்டாலின் அப்படியே நம்பிக்கிக்கொண்டு இருக்கிறார்… என்ன சிரிக்கிறீர்..?
”சிரிக்காமல் வேறென்ன செய்வது..?”
“தி.மு.க.வின் ஆதிக்கத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் அதன் கூட்டணிக் கட்சியான கொ.ம.தே.க.வின், தலைவர் ஈஸ்வரன், சமீபத்தில், அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இ.பி.எஸ்.,சுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்கிறார்கள். அவர் விரைவில், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவாராம்!”
“ஓ..!”
“இதற்கிடையே, ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வேண்டுமானால் எங்களுக்கு பணம் கொடுங்கள் என ஐபேக் வெளிப்படையாகவே வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டது!’ என பொங்குகிறார்கள் தி.மு.க.வினர்.!”
“அப்படியா..!”
“ஆமாம்! ஐபேக் நிறுவனம், தமிழகம் முழுதும் ஊழியர்களை நியமித்து, தி.மு.க., வேட்பாளர்கள் தேர்வு செய்கிறது. அதாவது, இவர்கள் மூன்று பேரை தேர்ந்தெடுத்து கொடுப்பார்கள். அவர்களில் ஒருவரை தி.மு.க. தலைமை தேர்வு செய்யும். இந்த நிலையில்தான், ‘மூன்று பேர் பட்டியிலில் உங்கள் பெயரை சேர்த்து விடுகிறோம்.. எங்களை கவனியுங்கள்!’ என்கிறார்களாம். இது கட்சித் தலைமைக்குச் செல்ல, தற்போது தி.மு.க. – ஐபேக் இடையே, பிளவு ஏற்பட்டுள்ளது. விரைவில் தி.மு.க.வுக்கான தனது பணிகளை ஐபேக் நிறுத்திக்கொள்ளும் என்கிறார்கள்!:
“அப்படியா..!”
“இதற்கிடையே தி.மு.க.வில் – அதாவது தி.மு.க. தலைமைக் குடும்பத்தில், ‘முதல்வர் வேட்பாளர் யார்?’ என்கிற விவாதம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. நீர்கூட, அவர்களது கிச்சன் கேபினட்டை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்த, “துர்காவா – ஸ்டாலினா’ என்று கட்டுரை எழுதிவிட்டீர். நான் சொல்லப்போவது இன்னொரு போட்டி. அதாவது, கனிமொழியும், முதல்வர் வேட்பாளர் போட்டியில் குதித்திருக்கிறார். அவரது தரப்பினர், ‘கையில் வைத்திருக்கும் பேப்பரைப் பார்த்தே படிக்கத்தெரியாதவர் ஸ்டாலின்… நிர்வாகத் திறமையும் இல்லை. அவர் முதல்வர் வேட்பாளரா? தவிர, அவரைவிட தத்தியான அவரது மகன் உதயநிதியும் ஆட்டம்போடுகிறார். இவர்களைவிட அதிக தகுதி உள்ள கனிமொழியை முதல்வர் வேட்பாளராகவோ.. குறைந்தபட்சம் துணை முதல்வர் வேட்பாளராகவோ அறிவிக்க வேண்டும்’ என்ற போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். மேலும், கனிமொழி ஆதரவாளர்கள் தமிழகம் முழுதும், ‘முதல்வர் கனிமொழி’ என்று விளம்பரப்பரங்கள் எழுதி வருகிறார்கள்!”
“அடேங்கப்பா…!”
“பைனல் பஞ்ச் ஆக ஒரு தகவல். தி.மு.க.வுக்கு தேர்தல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிசோர், கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய் வைத்திருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருமானவரித்துறைக்கு புகார்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. ‘வேட்பாளர் பட்டியலில் சேர்த்துவிடுகிறோம்’ என்று சொல்லி தி.மு.க. பிரமுகர்களிடம் வசூலித்த பணமே பல கோடி தேருமாம். இதுதான் வில்லங்கத்துக்குக் காரணம் என்கிறார்கள். விரைவில் அவர் மீது வருமானவரித்துறை நடவடிக்கை பாயும்!”
– அதிர்ச்சி தகவல்களைச் சொல்லிவிட்டு பறந்தார் நியூஸார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *