நடிகர் சூரிக்கு கொலை மிரட்டல்!

1
“நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபியுமான ரமேஷ் குடவாலா ரூ2.70 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்!” என்று காவல்துறையில் புகார் தெரிவித்தார் நகைச்சுவை நடிகர் சூரி. இது குறித்த விசாரணை நடந்துவருகிறது.
இந்நிலையில், நடிகர் சூரிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இது குறித்தும் அவர் விரைவில் காவல் துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் கோலிவிட்டில் ஒரு தகவல் உலவுகிறது.
ஹூம்… படத்துல சிரிக்க வைக்கிறாங்க.. நிஜத்துல சிரிப்பா சிரிக்கிறாங்க!
2
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
இது குறித்து காஜல், “எங்கள் திருமணம் வரும் 30ம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது.!” என்று அறிவித்துள்ளார்.
அதே நேரம், தனது பழைய கவர்ச்சி படம் ஒன்றை மீண்டும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.
“இதன் மூலம், திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சியாக நடிப்பேன் என்பதை சொல்லாமல் சொல்கிறார் காஜல்!” என்கிறார்கள் பாலிவுட்டில்.
மார்க்கெட்டிங்!
3
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படம், ‘மிகுந்த ஆபாசமாக இருக்கிறது’ என்ற கண்டனங்களைப் பெற்றது. இப்போது அதன் இரண்டாவது பாகமாகன, ‘இரண்டாம் குத்து’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இது ஆபாசத்தின் உச்சம் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜாவும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர், “சினிமா வியாபாரமும்தான்… ஆனால் படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது தவறு!” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடியாக ‘டிக் டிக் டிக்’ படத்தின் புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்தார், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். மேலும், “பாரதிராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். 1981-ம் ஆண்டு ‘டிக் டிக் டிக்’ படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ..?” என கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.
என்றைக்கோ செய்தது, இன்றைக்கு பாதிக்கிறது!
4
‘இதோ அதோ’ என தனது அரசியல் பிரவேச(!)த்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார் ரஜினி. கடைசியில், ‘மக்கள் எழுச்சி வந்தால்தான் அரசியலுக்கு வருவேன்!’ என அந்த விசயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனாலும் சில ஊடகங்களும், ரஜினி ரசிகர்களும் அவரை விடுவதாக இல்லை. ‘வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ரஜினி கட்சி துவங்கி விடுவார்!’ என்று பிரச்சாரம்(!) செய்து வந்தனர்.
இந்த நிலையில், வரும் ஜனவரி முதல், தனது ‘அண்ணாத்தே’ படததில் நடிக்க இருக்கிறார் ரஜினி. தொடர்ந்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. பிறகு டப்பிங்… அடுத்து இமயலை பயணம் என திட்டிருக்கிறார் ரஜினி.
அப்படியானால், அரசியல்..?
வழக்கம்போலத்தான்!
5
‘பிக்பாஸ்’ கடந்த ( மூன்றாவது) சீசனில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தனக்கு வர வேண்டிய சம்பளத்தை விஜய் டிவி இன்னும் தரவில்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், ‘இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு தற்போது ரூ.25 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்படுகிறது!’ என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து, ‘நிகழ்ச்சிக்கு உள்ளும் வெளியிலும் நீதி நியாயம் பேசும் கமல், தன்னுடன் பணியாற்றுபவருக்கு சம்பள பாக்கி என்றால் அது குறித்து கருத்து சொல்ல மாட்டாரா?“ என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
கமல் எப்போதும் மய்யமாகத்தானே கருத்து சொல்வார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *