ஆன்லைன் கொலைகள்!எச்சரிக்கை ரிப்போர்ட்!

செல்போனில் விளையாடும் ஆன்லைன் விளையாட்டான, ‘பப்ஜி’ போன்றவைகளில் ஈடுபடும் சிறுவர்கள் – இளைஞர்கள், மன அழுத்தம் அதிகமாக தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடந்துவந்தது. இந்த நிலையில், ‘பப்ஜி’ உள்ளிட்ட சில விளையாட்டுக்களை மத்திய அரசு தடை செய்தது.
ஆனால், அது போன்ற வேறு சில விளையாட்டுகள் தற்போதும் இருக்கின்றன; தற்கொலைகளும் தொடர்கின்றன என்பதுதான் அதிரவைக்கும் உண்மை. அதுவும் கடந்த ஒரு சில மாதங்களில் இது போன்ற தற்கொலைகள் அதிகரித்து உள்ளன.
ஸ்லக்: சம்பவம் 1
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், வளைகுடா நாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. மகன் சஜன் ஆகியோர் கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி அருகில் உள்ள கருமன்குடல் வசித்து வருகிறார்கள்.
துபாயில் இருக்கும் ராஜ்குமார் மனைவி, மகனுடன் வீடியோ காலில் பேசுவதற்காக ஆண்ட்ராய்டு போன் வாங்கிக்கொடுத்திருக்கிறார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சஜனுக்கு செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது முக்கிய பொழுது போக்கு. எப்போதும் தனது தாயாரின் செல்போனில் மூழ்கிவிடுவான்.
ஆரம்பத்தில் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்ட சஜன், அந்த விளையாட்டிற்கு அடிமையாகி இருக்கிறான். அது தடை செய்யப்படவே, ஆன்லைனில் ரம்மி விளையாடத் துவங்கி இருக்கிறான்.
இதில் ஆரம்பத்தில் பணம் வரவே, அதே விளையாட்டில் மூழ்கிவிட்டான். ஒரு கட்டத்தில் ரம்மியில் தொடர் தோல்வி ஏற்பட்டு பணத்தை இழந்தான். இதையடுத்து தனது தாயாருக்குத் தெரியாமல் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விளையாடி இருக்கிறான். அப்போதும் தொடர் தோல்வி.
ஒரு கட்டத்தில் இந்த விசயம், தாயார் கீதாவுக்கு தெரியவர, கண்டித்திருக்கிறார். சஜனோ, ‘இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால் விளையாட்டில் விட்டதை மீட்டுவிடுவேன்!’ என்று கூற, ஆத்திரத்தில் திட்டியிருக்கிறார் கீதா.
பணம் இல்லாமல் விளையாட்டைத்தொடர முடியாத விரக்தியில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டான், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சஜன்.
ஸ்லக்: சம்பவம் 2
நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திர நகரை சேர்ந்தவர் அர்ஜூனன். மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மகன் நிஷாந்த், பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது ஆன்லைன் சேர்க்கை மூலமாக நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறான்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட நிஷாந்த், குடும்பத்தினருக்குத் தெரியாமல், பணத்தை எடுத்து செலவிட்டுள்ளான். இதனால் குடும்பத்தினர்கண்டிக்கவே, தற்கொலை செய்துகொண்டான்.
.
சம்பவம் 3
திருப்பூர், அவினாசி பிஎஸ் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன்.. பொதுத் துறை வங்கி ஒன்றில் காவலராக பணிபுரிகிறார். இவரது மனைவி பிரதிபா.
இத்தம்பதியின் மூத்தமகன் சஞ்சய், பத்தாம் வகுப்பு படித்து வருகிறான் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்தாமல், செல்போனில் விளையாடி பொழுதைக் கழித்திருக்கிறான்.
இதைக் கவனித்த பெற்றோர், ‘பாடத்தில் கவனம் செலுத்து!’ என கண்டிக்க… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
இது குறித்து கணினி நிபுணர் மோகனிடம் பேசினோம். அவர், “தற்போது ஆன்லைனில், ‘ப்ரீ பயர்’ என்பது உள்ளிட்ட பலவித சூதாட்ட விளையாட்டுக்கள் உள்ளன. இவற்றில் ஈடுபடத் தூண்டும் வகையில் பலவிதமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ஈர்க்கப்பட்டு, பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களே இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி, உயிரையும் விடுகின்றனர்!” என்றார்.
மனநல மருத்துவர் பாலன், இது குறித்து நம்மிடம் கூறும்போது, “பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் மட்டும்தான் உயிரைக் குடிக்கின்றன என பலரும் நினைக்கிறார்கள். மற்ற பல சூதாட்ட விளையாட்டுகளும் இளைஞர்களை காவு வாங்குகின்றன. இதில் ஈடுபடும் இளைஞர்கள் பலர் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயல்கின்றனர். இவற்றை தற்கொலை என்று சொல்ல முடியாது. கொலைகள் என்றே சொல்ல வேண்டும்.
இது போன்ற விளையாட்டுகளை, `மோர் அடிக்டிவ் கேம்’ என்று வெளிப்படையாகவே விளம்பரப்படுத்துகின்றனர். இவற்றை அனுமதிக்கவே கூடாது.
இது போன்ற விளையாட்டை உருவாக்கும் குழுவில் உளவியல் நிபுணர்களும் இருக்கின்றனர். இந்த விளையாட்டை நோக்கி எப்படி மக்களை இழுப்பது… மக்கள் இதைவிட்டு வெளியேறாமல் வைத்திருப்பது எப்படி என்பதையெல்லாம் ஆராய்ந்து, அவர்களை அடிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்விளையாட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
இவை, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன. காரணம் இந்த பருவத்தில்தான் எதற்கும் எளிதாக அடிமையாகக் கூடிய நிலையில் மனநிலை இருக்கும்.
‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்த இளைஞர்கள், அது தடை செய்யப்பட்டவுடன் இப்போது ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகிவிட்டனர் என்பதே உண்மை!
இதுமாதிரி விளையாட்டுகள் ஆரம்பத்தில் பொழுது போக்க உதவும், சிலருக்கு இதன் மூலம், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதும் உண்டு.
ஆனால், நாளடைவில் இவ்வகை விளையாட்டுகள் ஒரு போதை போலாகி, மனம் அதிலேயே சுழன்று நிற்கும்; வேறெதிலும் நாட்டமின்றிப் போகும்.
வேறு வேலையே பார்க்கமாட்டார்கள்.. படிக்கமாட்டார்கள்.. பிறரிடம் பழகவும்மாட்டார்கள். இதனால் அவர்களது மனநிலை கடுமையாக பாதிக்கப்படும்; எரிச்சல், கோபம், கவனச்சிதறல், உறக்கமின்மை ஏற்படும்.
ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டுகளில் தோற்று விட்டாலோ, அதை விளையாட குடும்பத்தினர் தடை விதித்தாலோ தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கின்றனர்!” என்றார்.
“இதிலிருந்து இளைஞர்களை மீட்பது எப்படி?” என்று கேட்டபோது, “குறைந்தபட்சம் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை அறிமுகப்படுத்தக் கூடாது.
தற்போது எல்.கே.ஜி படிக்கிற குழந்தைகளுக்குக் கூட ஆன்லைன் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஓவியம் போன்ற இதர பயிற்சிகளும் ஆன்லைன் மூலம் நடக்கின்றன. இந்த பயிற்சி நேரத்தைத் தவிர, குழந்தைகள் செல்போனை தொட, பெற்றோர்கள் தடை விதிக்க வேண்டும்.
எட்டு முதல் 14 வயதில் உள்ள சிறுவர்கள், பெற்றோர்களின் நேரடி கண்காணிப்பில்தான் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். 14 – 18 வயதில் உள்ள சிறுவர்கள், வெளிப்படைத்தன்மையுடன் செல்போனை பயன்படுத்த வேண்டும். அதாவது பெற்றோருக்கு தெரியாமல் பயன்படுத்தக் கூடாது.
இவர்களுக்கு, செல்போன் சூதாட்ட விளையாட்டுகளில் உள்ள தீமையைச் சொல்லி அவற்றிலிருந்து விலகியிருக்க வைப்பது பெற்றோரின் கடமை,.
இந்த விளையாட்டுக்கு அடிமையாகவிட்ட இளைஞர்களை மெல்ல மெல்ல மீட்க வேண்டும். அதற்கு தகுந்த மனநல ஆலோசகரின் வழிகாட்டுதல் தேவை!” என்றார்.
சமூக ஆர்வலர் குமரன், “பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது உணமையே. அதே நேரம், இது போன்ற விளையாட்டுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பது குறித்த விழிப்புணர்வு தேவை. இதை மீடியா செய்ய வேண்டும். தவிர அரசும் கவனம் எடுத்து இது போன்ற விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும்!” என்றார்.
மேலும் அவர், “பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில், ஆபாச மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை பதிவிட்டாலோ, படங்களை வெளியிட்டாலோ தடை செய்யும் வழக்கம் இருக்கிறது. இது வரவேற்கத் தக்கதுதான்.
அதே போல, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரைப் பறிக்கும், ஆன்னலைன் விளையாட்டுக்களை அவர்களே தடை செய்வதுடன், அவை குறித்த விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும்!” என்றார்.
‘தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே!” என்பார்கள் சமூகவியல் அறிஞர்கள். அது போல, அப்பாவி சிறுவர்களை, ‘தற்கொலை’ என்ற பெயரில் கொலை செய்துகொண்டிருக்கிறோம் நாம்.
இதை எப்படி தடுக்கப்போகிறோம்?
பாக்ஸ்
ஸ்லக்: மாற்று என்ன
ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தைத் திருப்ப, கல்வியாளர் சுப்ரமணியன் ஒரு ஆலோசனை கூறுகிறார்.
அவர், “தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்வதால் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஆகவே மாணவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. வெளியில் சென்று நண்பர்களைச் சந்திக்கவோ, விளையாடவோ முடியாதநிலை.
ஆகவே, குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பாக, நமது பாரம்பரிய விளையாட்டுக்களான, பல்லாங்குழி, தாயம் போன்றவற்றை விளையாடி, பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம்!” என்கிறார்.
லீட்:
‘தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே!” என்பார்கள் சமூகவியல் அறிஞர்கள். அது போல, அப்பாவி சிறுவர்களை, ‘தற்கொலை’ என்ற பெயரில் கொலை செய்துகொண்டிருக்கிறோம் நாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *