துயரத்தில் முடிந்த துரைமுருகன் கலகம்!: சிதறும் தி.மு.க. கூட்டணி!

‘அந்த நாயை தூக்கிட்டு போங்கப்பா!’ என்று தி.மு.க. தொண்டரை ஆ.ராசா, ஏசியது, அக்கட்சி தொண்டர்களுக்கு இடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிற கட்சி தலைவர்களை, ‘அவன், இவன்’ என துரை முருகன் பேசியது கூட்டணியை கலகலக்க வைத்துள்ளது.
வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், “ இப்போ எங்க கூட்டணியில இருக்கிறவன் வெளியில போகலாம்.. புதுசா வேற எவனாவது வரலாம்… தொகுதி உடன்பாடு முடிஞ்சாத்தான், கூட்டணியில எவனெவன் இருப்பான்னு தெரியும்!” என்று ஆணவத்துடன் பேசினார்.
இது தி.மு.க. கூட்டணியில் தற்போது இருக்கும் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, வி.சி.க. தலைவர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “எப்போதுமே கூட்டணி கட்சிகளை தி.மு.க. மதிப்பது இல்லை என்பது அதன் வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். தி.மு.க. கூட்டணி குறித்து ஒரு முறை வி.சி.க. தலைவர் திருமாவளவன், ‘ அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் இருக்கிற கோணத்தையம் அவிழ்த்துவிடுவார்!’ என்று அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அதுவும், தி.மு.க.வின் துரைமுருகன், எப்போதுமே, கூட்டணிக் கட்சியினரை நக்கலும், நையாண்டியுமாக பேசுவார். ஒரு முறை காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம், ‘இத்தனை சீட் கேட்கிறீர்களே.. போட்டியிட அத்தனை பேர் உங்கள் கட்சியில் இருக்கிறார்களா?’ என்று கேட்டதும் நடந்தது.
கடந்த ஜனவரி மாதம்கூட, ‘திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டுப்போனால் போகட்டும்!’ என்றும் துரைமுருகன் வெளிப்படையாக கூறினார்!” என்கிறார்கள்.
துரைமுருகன் பேச்சினால், ம.தி.மு.க.வுக்குள் தி.மு.க. மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
அக்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர், “தற்போதைய சூழலில் வெளிப்படையாக பேச முடியாது என்பதால் எனது பெயரை தவிர்க்கவும்..” என்ற முன்னுரையோடு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
அவர், “தி.மு.க. எங்களை தொடர்ந்து அவமதித்து வருகிறது. சில தி.மு.க. விழாக்களில், வைகோவை பேச அனுமதிக்காமல் வெறும் பார்வையாளராக அமரவைத்தார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், குறைவான சீட் ஒதுக்கியதோடு, ‘தி.மு.க.வின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்!’ என நிர்ப்பந்தித்தனர்.
அதே போலத்தான் இப்போதும் தொடர்ந்து அவமானப்படுத்தி வெளியேறச் செய்ய திட்டமிடுகிறார் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
‘வரும் சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஐந்து இடங்கள்தான் அளிப்போம்; அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்!’ என்கிறது தி.மு.க. தரப்பு.
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள், இழிவாகப் பேசி, மேலும் அதிரவைத்திருக்கிறார் துரைமுருகன்!” என்று கொந்தளித்தார்.
இதே போல வி.சி.க.விலும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சி என்பதால், எப்போதுமே தி.மு.க. எங்களை இரண்டாம்கட்ட கட்சியாகவே பார்ப்பது வழக்கமாக இருக்கிறது.
ஒருமுறை தேர்தலின் போது, ‘பொதுத்தொகுதி ஒன்றை ஒதுக்குங்கள்!’ என்று எங்கள் தலைவர் திருமா, தி.மு.க.வின் அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, ‘உங்களுக்கு எதற்கு பொதுத் தொகுதி?’ என கருணாநிதி கிண்டலாக கேட்டார். அருகில் இருந்த ஸ்டாலினும், துரைமுருகனும் வெடித்துச் சிரித்தார்கள்.
இப்படி நிறைய அவமானங்களைப் பொறுத்துக்கொண்டுதான் தி.முக. கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், எங்களை ஒதுக்கிவிட்டு, துரைமுருகன் மூலம், பா.ம.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பா.ம.க. இந்த கூட்டணிக்குள் வந்தால், நாங்கள் இங்கே இருக்க முடியாது. அதனால்தான் முன்னதாகவே அவமானப்படுத்தி எங்களை வெளியேற்ற முயற்சிக்கிறது தி.மு.க.!
அதன் ஒரு வெளிப்பாடுதான் துரைமுருகனின் அநாகரீகப் பேச்சு!” என்றார்.
இதே வருத்தம் காங்கிரஸ் கட்சியிலும் நிலவுகிறது. அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர், “நாங்கள் ஆட்சியில் இருந்தால் வம்பு வழக்கிற்கு பயந்து, உரிய இடங்களை தி.மு.க. தரும். இல்லாவிட்டால் அவமானப்படுத்தும். இதுதான் அக்கட்சியின் வழக்கம். அதே நிலைதான் இப்போதும் நிலவுகிறது. இதற்கான பலனை தி.மு.க. நிச்சயம் அனுபவிக்கும்!” என்றார்.
இரு கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடமும் இதே விரக்தி நிலவுகிறது.
மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி.ஐ. நிர்வாகி ஒருவர், “முதலாளித்துவத்தை எதிர்த்து – ஆண்டான் அடிமை முறையை எதிர்த்து, உருவானதுதான் கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால், தி.முக.வுக்கு அடிமையாகத்தான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கிறோம். இதற்கு எங்கள் கட்சி தலைவர்களும் காரணம். தி.மு.க.விடம் தேர்தல் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டால், பிறகு அக்கட்சி எப்படி மதிக்கும்?” என்று குமுறினார்.
இது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “கடந்த இரு சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும் தொடர்ந்து தி.முக. தோல்வி அடைந்துவிட்டது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அக்கட்சிக்குத் தோல்வியே கிடைத்தது. வரும் தேர்தலிலும் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கோ, அடுத்தகட்ட தலைவர்களுக்கோ இல்லை.
இதைத்தான் சமீபத்தில் திருமாவளவன், ‘கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல், தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றால், அந்தளவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால், ஏன் கூட்டணி கட்சிகளை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்த வேண்டும்?’ என வெளிப்படையாகவே கேள்வி எழுப்பி, தி.மு.க. தலைவர்களின் தோல்வி பயத்தை அம்பலமாக்கினார்.
தற்போது தி.மு.க. தலைமை, ‘‘ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. கடந்த இரு தேர்தலைப்போல இன்றி கூடுதலாக இடங்களை வென்றால்கூட போதும். நம்முடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை. ஆகவே கூடுதல் தொகுதியில் நாமே போட்டியிட்டால், ஓரளவாவது வெற்றிகாண முடியும்!’ என்று நினைக்கின்றது. அதன் வெளிப்பாடே கூட்டணி கட்சிகளை அவமதிக்கும் இந்த பேச்சுக்கள்!” என்றார்.
இது குறித்து அரசியல் விமர்சகர்கள், “இந்தத் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை அளிக்க தி.மு.க. விரும்பவில்லை. தவிர, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர, மற்றவை எல்லாம், தங்களது உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என, நிபந்தனை விதிக்கிறது. இதனால் தங்களது தனித்தன்மை பறிபோகும் என கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேறு கூட்டணிக்குச் செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அவர்களை அடக்கி வைக்கும் விதமாகவே, துரைமுருகன், ‘சீட் கூறைவுன்னு இங்கே இருக்கிறவன் வெளியில போவான்..’ என்றும் பேசியிருக்கிறார்.
இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. பா.ம.க.வை கூட்டணிக்கு அழைப்பதாக கூறி, வி.சி.க.வுக்கு குறைந்த இடத்தை அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால் பா.ம.க.வும், இந்த கூட்டணிக்கு வருவதாக இல்லை. ‘தோல்வி அடையும் கூட்டணியில் ஏன் நாம் சேர வேண்டும்?’ என்ற மனநிலையியே அக்கட்சி இருக்கிறது. இந்த விரக்தியும் துரைமுருகன் பேச்சுக்கு காரணமாக இருக்கலாம்!” என்றார்கள்.
இந்த நிலையில், துரைமுருகன், “வாயில், ‘மாஸ்க்’ அணிந்து பேசியதால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்க லாம்!” என்று தனது, ‘அவன், இவன்’ அவமரியைதை பேச்சுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆனால், ‘ஆணவப்பேச்சின் மூலம் கூட்டணி தலைவர்களை அடக்கவிடலாம் என தி.முக. நினைக்க.. அதை தலைகீழாக, கூட்டணியை சலசலக்க வைத்திருக்கிறது’ என்பதே உண்மை நிலை.
பாக்ஸ்:
தொடரும் இழிவு!
அரசியல் விமர்சகர்கள், “தொடர்ந்து பிறரை இழிவுபடுத்துவதையே தி.மு.க. தலைமையும், இரண்டாம் கட்ட தலைவர்களும் வழக்கமாக வைத்துள்ளனர்.
தி.மு.க.வின் தற்போதைய பொருளாளர் டி.ஆர்.பாலுவும், எம்.பி. தயாநிதி மாறனும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசினார். அதே போல, தி.மு.க. எம்.எல்.ஏ.வான பழனிவேல் தியாகராஜன், வண்ணார் இன மக்களை இழிவுபடுத்தினார். சமீபத்தில் சொந்த கட்சிக்காரர்களையே, ‘நாய்’ என்று ஏசினார் ஆ.ராசா. இப்போது கூட்டணிக் கட்சியினரை, தரம்தாழ்ந்து பேசியிருக்கிறார் துரைமுருகன்! சுயமரிதாயை கட்சி என கூறிக்கொள்ளும் தி.மு.க.வின் தலைவர்கள், பிறருக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!” என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *